செய்திகள்
டிடிவி தினகரன்

ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஏமாற்றும் அரசை ஜனநாயக முறையில் விரட்டியடிப்போம் - தினகரன்

Published On 2020-02-25 05:23 GMT   |   Update On 2020-02-25 05:23 GMT
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரை சொல்லி கொண்டு ஏமாற்றும் அரசை ஜனநாயக முறையில் விரட்டியடிப்போம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்க ராஜா தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் உமாதேவன் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் பால்கண்ணன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள், ஹென்றி, சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பரமசிவ அய்யப்பன் வரவேற்றார். கூட்டத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், பொருளாளர் வெற்றிவேல், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் பேசினார்கள்.

டி.டி.வி. தினகரன் பேசும் போது கூறியதாவது:-

இங்கு வந்துள்ள கூட்டத்தை பார்க்கும் போது அ.ம.மு.க.வின் முதல் மாநாடு போல் இருக்கிறது. இந்த ஆட்சியில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்திற்கே அனுமதி மறுக்கிறார்கள். ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்று இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. ஜெயலலிதா என்றால் வீரம், துணிச்சல். அதே போன்று அவருடைய உண்மையான தொண்டர்களும் இருக்கிறோம்.

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் அ.ம.மு.க.வில் தான் உள்ளனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த இயக்கம் தற்போது ஒரு கம்பெனியிடம் உள்ளது. துரோகிகளிடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கவே அ.ம.மு.க. உருவாக்கப்பட்டது. சசிகலா விரைவில் வெளிவருவார். எடப்பாடியும், பன்னீர்செல்வமும், ஜெயலலிதா பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றனர். பெண்களுக்காக ஜெயலலிதா ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். தற்போதைய அரசு அதில் கவனம் செலுத்தவில்லை.

இந்தியா மதசார்பற்ற நாடு. மதத்தின் அடிப்படையில் சட்டங்களை உருவாக்ககூடாது. சட்டம் என்பது மக்களுக்கு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அச்சுறுத்துவதாக இருக்கக்கூடாது. 2003-ல் வாஜ்பாய் அரசு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த போது மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது.

அப்போது தான் என்.ஆர்.சி.க்கு அடித்தளம் இடப்பட்டது. அதன் பிறகு 2010-ல் காங்கிரஸ் ஆட்சியின் போது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் மேலும் சிலவற்றை சேர்த்து அறிமுகம் செய்தார்கள். அப்போதும் மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. இதே போல் நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்பட்ட போதும், மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது. மக்களுக்கும், சிறுபான்மையினருக்கும் காவலனாக இருப்பது போல் தி.மு.க. ஏமாற்றுகிறது.

இப்போது காவிரி வேளாண்மை மண்டலம் அறிவிக்கப்பட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சட்டசபை தேர்தலை மனதில் வைத்து கொண்டே அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே ஓ.என்.ஜி.சி. செயல்படுத்தும் 152 எண்ணை கிணறுகள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணை கிணறுகள் உள்ளன.

அந்த நிறுவனங்கள் தொடங்கி இருக்கும் பூர்வாங்க பணிகளை நிறுத்த வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில் தவிர வேறு எந்த தொழிலையும் அங்கு அனுமதிக்க கூடாது.



மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது கூடுதல் நிதி பெறுவதற்காக தான் என்று கூறினார்கள். ஆனால் இப்போது மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார்.

தமிழகத்தின் நிதி நிலையில் சிக்கல் இருக்கிறது. தமிழக அமைச்சர்கள் சொந்த காரணங்களுக்காக தான் டெல்லி சென்று வருகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால் தான் பாரதிய ஜனதா தமிழகத்தில் தோல்வியை தழுவியது.

இதே நிலை தொடர்ந்தால் அனைத்து தேர்தலிலும் பா.ஜ.க. மீண்டும் தோல்வியை சந்திக்க நேரிடும். ஜெயலலிதாவின் ஆட்சியை மீட்டெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அ.ம.மு.க. ஆகும். ஜெயலலிதாவின் பெயரை சொல்லி கொண்டு ஏமாற்றும் அரசை ஜனநாயக முறையில் விரட்டியடிப்போம்.

சசிகலாவை சிறையில் சந்திக்காதவர்கள் ஒரு போதும் இங்கு வந்து இணைந்து செயல்பட வாய்ப்பில்லை. விரைவில் அ.ம.மு.க.வுக்கு தனி சின்னம் கிடைக்கும். தொண்டர்கள் விரும்பும் நல்ல கூட்டணியை அமைப்போம். அ.ம.மு.க. தொண்டர்களையும், தமிழக மக்களையும் நம்பி இருக்கிறது.

வருகிற சட்டசபை தேர்தலின் போது அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஆட்சியை பிடிக்க வேண்டும். அ.தி.மு.க.வை மீட்டெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News