செய்திகள்
கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்த போது எடுத்த படம்.

மு.க.ஸ்டாலின் எப்போதும் முதல்வர் கனவிலேயே இருக்கிறார்- எடப்பாடி பழனிசாமி

Published On 2020-02-24 10:21 GMT   |   Update On 2020-02-24 14:56 GMT
திமுக தலைவர் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் முதல்வர் கனவிலேயே இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கோவை:

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணி காக்கப்பட்டு பெண்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனர். தமிழகத்தில் பெண்கள் அச்சமின்றி வாழ்கின்றனர். பாதுகாப்பான நகரமாக சென்னை, கோவை உள்ளது.  ஜெயலலிதாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் இருப்பதால் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

தமிழகத்தில் சிறுபான்மையினர் யாரும் அச்சப்பட தேவையில்லை.  மத்தியில் திமுக அங்கம் வகித்த போதுதான் தமிழகத்தில் என்பிஆர் அறிமுகப்படுத்தப்பட்டது.  அதிமுக ஆட்சிக்கு அவப்பெயர், இடையூறு ஏற்படுத்தவே தவறான செய்தியை திமுக பரப்பி வருகிறது.

என்.பி.ஆரில் 3 அம்சங்கள் குறித்து விருப்பப்பட்டால் சொல்லலாம்; இல்லையெனில் வேண்டாம். ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமையுள்ளது.



10 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் வாங்கப்பட்ட கடனுக்கு தொடர்ந்து வட்டி கட்டி வருகிறோம். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் முதல்வர் கனவிலேயே இருக்கிறார். அதிமுக அரசு நல்ல திட்டங்களை அறிவிப்பதால் ஸ்டாலினால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

கே.சி.பழனிசாமி அதிமுகவில் இல்லை; அவர் பல தவறுகளை செய்து சிறை சென்றுள்ளார். குடிமராமத்து திட்டம் வெற்றி பெற்றதால் மு.க.ஸ்டாலின், தினகரனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

ஊடகங்கள் பற்றி மிகவும் கீழ்த்தரமான வார்த்தையை ஆர்.எஸ்.பாரதி பயன்படுத்தியுள்ளார்.  மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு 7 பேரை விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம்.  திமுக ஆட்சியில் நளினியை மட்டும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  7 பேர் விடுதலை பற்றி கேட்க திமுகவினருக்கு எந்த தகுதியும் இல்லை.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 
Tags:    

Similar News