செய்திகள்
வெள்ளியணையில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள தர்ப்பூசணியை படத்தில் காணலாம்.

வெள்ளியணை பகுதியில் தர்ப்பூசணி விற்பனை தீவிரம்

Published On 2020-02-23 18:12 GMT   |   Update On 2020-02-23 18:12 GMT
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கடுமையாக உள்ளது. இதனால் தர்ப்பூசணி விற்பனையும் களைக்கட்ட தொடங்கி விட்டது.
வெள்ளியணை:

கோடைகாலத்தில் வெயில் தாக்கத்தால் உடலில் இருந்து வியர்வை மூலம் நீர் சத்து வெளியேறி உடல் சோர்வையும், பல்வேறு உடல் உபாதைகளையும் உண்டாக்கும். இவற்றை தவிர்க்கும் பொருட்டு கோடை காலத்தில் உற்பத்தி ஆகும் வகையில் இளநீர், பதநீர், நுங்கு, தர்ப்பூசணி, வெள்ளரி என பலவற்றை இயற்கை அளித்துள்ளது.

அந்த வகையில் விவசாய நிலங்களில் விவசாயிகளால் பயிர் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும் தர்ப்பூசணியும் ஒன்றாகும். தர்ப்பூசணியில் உடலுக்கு குளிர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரும் எண்ணற்ற சத்து பொருட்கள் உள்ளன. கோடை காலத்தில் உடலில் நீர் சத்து அதிக அளவில் வெளியேறி சிறுநீரகத்தின் செயல்பாடு, ரத்த ஓட்டம், மலச்சிக்கல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

இதை தடுக்கும் வகையில் 90 சதவீதம் நீர் சத்துடன், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து தோல்செல்களின் வளர்ச்சியை அதிப்படுத்தும் சத்துக்கள் உள்ளதால் பலரும் தர்ப்பூசணியை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் கோடை காலம் தொடங்கிவிட்டால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் ஆங்காங்கே தர்ப்பூசணி கடைகள் செயல்பட தொடங்கி விடும். தற்போது, கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கடுமையாக உள்ளது. இதனால் தர்ப்பூசணி விற்பனையும் களைக்கட்ட தொடங்கி விட்டது.

தர்ப்பூசணியை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் அல்லது சில்வர் தட்டுகளில் வைத்து ஒரு தட்டு தர்ப்பூசணி துண்டுகள் ரூ.10 என விற்பனை செய்யப்படுகிறது.மேலும் முழு தர்ப்பூசணிகளாக வேண்டுவோருக்கு கிலோ ரூ.20 முதல் ரூ.50 வரை ஒவ்வொரு பகுதியை பொருத்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் திண்டிவனம் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட தர்ப்பூசணி பழங்கள் கரூர் வெள்ளியணை சாலையில் மணவாடி பகுதியில் குவித்து வைக்கப்பட்டு அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் நின்று துண்டுகளாக வாங்கி சாப்பிட்டும், முழு பழங்களாக வாங்கியும் செல்கின்றனர்.
Tags:    

Similar News