செய்திகள்
கோப்பு படம்

19 பேர் உயிரை பலிவாங்கிய லாரி டிரைவர் கோவை சிறையில் அடைப்பு

Published On 2020-02-22 11:57 GMT   |   Update On 2020-02-22 11:57 GMT
திருப்பூர் அருகே 19 பேர் உயிரை பலி வாங்கிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் அவினாசி ராக்கியாபாளையம் பிரிவில் கோவை - சேலம் 6 வழிச்சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை கண்டெய்னர் லாரி கேரள அரசு பஸ் மீது மோதியதில் 19 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காயம் அடைந்த 24 பேரும் கேரளாவுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவர் பாலக்காட்டை சேர்ந்த ஹேமராஜ் என்பவர் திருமுருகன்பூண்டி போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ஹேமராஜ் சம்பவத்தன்று கொச்சி துறைமுகத்தில் இருந்து லாரியில் லோடு ஏற்றி வந்ததாகவும், விபத்து ஏற்பட்ட சமயம் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

விபத்து நடந்தவுடன் போலீசில் சிக்காமல் இருக்க லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டேன். போலீசார் என்னை கைது செய்து நடந்த விவரங்களை கூறியபோது தான் இவ்வளவு பெரிய விபத்து நடந்தது எனக்கு தெரிந்தது என்றார்.

இதையடுத்து போலீசார் அவரை திருப்பூர் ஜே.எம்.எண்.2 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு உதயசூரியா முன்பு ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு அவரை மார்ச் 4-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ஹேமராஜை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News