செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ

சிவந்தி ஆதித்தனார் புகழுக்கு மேலும் ஒரு மணி மகுடம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published On 2020-02-22 09:53 GMT   |   Update On 2020-02-22 09:53 GMT
திருச்செந்தூரில் திறக்கப்பட்டுள்ள மணிமண்டபமானது பா.சிவந்தி ஆதித்தனாரின் புகழுக்கு மேலும் ஒரு மணி மகுடம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.
திருச்செந்தூர்:

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டப திறப்பு விழாவில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அரசியல் பயணத்தை தொடங்கியது திருச்செந்தூரில் தான். அதுபோல் சின்னய்யா என்று தமிழக மக்களால் பெருமையுடன் அழைக்கப்படும் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்து பெருமை சேர்த்து இருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

அம்மா ஆட்சி காலத்தில் தான் தியாகிகளையும், தலைவர்களையும் சிறப்பிக்கும் வகையில் மணிமண்டபம், சிலைகளை அமைத்து அவர்களுக்கு பெருமை சேர்த்தார்கள்.

அவரது வழியில் கடந்த 3 ஆண்டுகளில் பல தலைவர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தூத்துக்குடி மண் சுதந்திர போராட்ட காலத்திலேயே பல தலைவர்களை நாட்டுக்கு தந்த மண். வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையத்தேவன், பாரதியார், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், வீரன் அழகு முத்துக்கோன், உமறுப்புலவர் உள்ளிட்ட தலைவர்கள் இந்த மண்ணை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு எல்லாம் மணிமண்டபம் அமைத்த பெருமை அம்மா அவர்களையே சேரும்.

அந்த வரிசையில் இந்த மண்ணை சேர்ந்த சின்னய்யா அவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டபம் அமைத்து தந்திருக்கிறார்.

இது மணிமண்டபம் அல்ல. பா.சிவந்தி ஆதித்தனாரின் புகழுக்கு மேலும் ஒரு மணி மகுடம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக மட்டுமல்ல, தான் ஒரு விவசாயி என்று கூறி விவசாயத்தை பாதுகாத்த சாமியாக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்து வருகிறார்.

நாட்டில் இன்று பத்திரிக்கை துறை எவ்வளவோ வளர்ச்சி கண்டிருக்கிறது. ஆனால் பத்திரிக்கை துறை வளர்ச்சி அடையாத அந்த காலத்தில் தமிழ் உணர்வோடும், எல்லோரும் எளிதாக பத்திரிக்கையை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தினத்தந்தியை சி.பா.ஆதித்தனார் தொடங்கினார். அவர் தொடங்கிய தினத்தந்தியை அதே வழியில் தனயன் சின்னய்யா பா.சிவந்தி ஆதித்தனார் சிறப்பாக நடத்தி இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிக்கை என்ற பெருமையை பெற்று தந்துள்ளார்.

பத்திரிக்கை துறை மட்டுமல்ல, ஒலிம்பிக் சங்க தலைவராக, கைப்பந்து சங்க தலைவராக விளையாட்டுத் துறைக்கு பா.சிவந்தி ஆதித்தனார் ஆற்றிய பணிகள் ஏராளம். அதுபோல் ஆலயங்களுக்கு அள்ளிக்கொடுத்த வள்ளல் அவர். அந்த கொடை வள்ளலுக்கு பெருமை சேர்க்கும் விழா இந்த விழா.

இந்த மணிமண்டபம் திருச்செந்தூரின் மற்றொரு அடையாளமாக திகழும். இந்த மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற அறிவிப்பை இதே தூத்துக்குடி மண்ணில் 25.11.2017 அன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அன்று அறிவித்ததை இன்று நிறைவேற்றி முடித்து இருக்கிறார்.

நேற்று நள்ளிரவு 1 மணி வரை இந்த மேடை பகுதியில் இருந்தேன். அதிகாலையில் மழை கொட்டியிருக்கிறது. எவ்வளவு குளிர்சாதன வசதிகள் செய்தாலும் கிடைக்காத வகையில் விழா பந்தல் குளுமையாக காட்சி அளிக்கிறது. இது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெள்ளை மனதுக்கு கிடைத்த நற்சான்று.

தூத்துக்குடி உப்பு விளையும் மண். “உப்பிட்ட வரை உள்ளளவும் நினை” என்பார்கள். அதுபோல் அய்யாவுக்கும், சின்னய்யாவுக்கும் பெருமை சேர்த்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு என்றும் நன்றியுடன் இருப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News