செய்திகள்
மு.க.ஸ்டாலின்

துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதி- மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்

Published On 2020-02-21 21:04 GMT   |   Update On 2020-02-21 21:04 GMT
திடீர் நெஞ்சு வலி காரணமாக துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலம் குறித்து மு.க. ஸ்டாலின் விசாரித்தார்.
சென்னை:

தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான துரைமுருகனுக்கு நேற்று மாலை திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் போரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

ஆஸ்பத்திரியில் 6-வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். டாக்டர்களின் சிகிச்சைக்கு பிறகு அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துரைமுருகன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவலை அறிந்ததும், தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து, அவரின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

தி.மு.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்கும் துரைமுருகனுக்கு கடந்த ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தலின்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அவர் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 2 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.

அதன்பின், கடந்த நவம்பர் மாதம் மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தில், காய்ச்சல் காரணமாக அவர் சிகிச்சை பெற்றதாக ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில், மீண்டும் உடல் நலக்குறைவு காரணமாக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என ஆஸ்பத்திரி வட்டாரம் தெரிவித்தது.
Tags:    

Similar News