செய்திகள்
ஆற்றில் மூழ்கி பலி

ஆத்தூர் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாதயாத்திரை பக்தர் பலி

Published On 2020-02-21 17:51 GMT   |   Update On 2020-02-21 17:51 GMT
ஆத்தூர் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பாதயாத்திரை பக்தர் உயிரிழந்தார். அவர் ஆற்றில் மூழ்கிய தனது நண்பரான மாற்றுத்திறனாளியை காப்பாற்றி விட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
ஆறுமுகநேரி: 

ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சுமார் 150 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதயாத்திரையாக திருச்செந்தூர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் அப்பகுதியை சேர்ந்த நண்பர்களான முருகேசன் மகன் மாரிமுத்து (வயது 25), சவரிமுத்து மகன் கூலித்தொழிலாளி சிலுவை அந்தோணி (27) ஆகியோரும் சென்றனர்.

மாரிமுத்து கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. எனவே அவர் தனது மூன்று சக்கர சைக்கிளில் பாதயாத்திரை பக்தர்களுடன் சென்றார். அவர்கள் அனைவரும் நேற்று காலையில் ஆத்தூரை அடுத்த முக்காணி தாமிரபரணி ஆற்றின் தென்புற படித்துறையில் குளித்தனர். மாற்றுத்திறனாளி மாரிமுத்து, ஆற்றின் படித்துறை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக படித்துறை அருகில் உள்ள ஆழமான பகுதியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலுவை அந்தோணி விரைந்து சென்று மாரிமுத்துவை காப்பாற்றி கரை சேர்த்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிலுவை அந்தோணி தண்ணீரில் மூழ்கினார். உடனே அக்கம்பக்கத்தினர் சிலுவை அந்தோணியை தேடினர். ஆனாலும் அவரை மீட்க முடியவில்லை. இதுகுறித்து ஆத்தூர் போலீசாருக்கும், திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, ஆற்றில் இறங்கி தேடினர். இதில் தண்ணீரில் மூழ்கி இறந்த சிலுவை அந்தோணியின் உடலை மீட்டனர். அவரது உடலை ஆத்தூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீரில் மூழ்கியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாரிமுத்துவை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு பாதயாத்திரை சென்றபோது, ஆற்றில் மூழ்கிய மாற்றுத்திறனாளி நண்பரை காப்பாற்றிவிட்டு, தொழிலாளி உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News