செய்திகள்
அம்மா திட்ட முகாம்

தென்காசி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது

Published On 2020-02-20 13:42 GMT   |   Update On 2020-02-20 13:42 GMT
தென்காசி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடக்கிறது.
தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடக்கிறது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு பயணம் செய்து நீண்ட நேரம் காத்திருந்து மனுக்களை அளிப்பதால் ஏற்படும் நேரம், செலவு மற்றும் பல்வேறு இன்னல்களை போக்கும் வகையில் மக்கள் வசிக்கும் கிராமத்திற்கே வருவாய்த்துறை அலுவலர்கள் சென்று குறைகளை கேட்கும் வகையில் அம்மா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் நாளை (வெள்ளிக்கிழமை) தென்காசி மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் நடக்கிறது. சங்கரன்கோவில் தாலுகா பொய்கை கிராமத்திலும், திருவேங்கடம் தாலுகா வரகனூர், தென்காசி தாலுகா ரவணசமுத்திரம், செங்கோட்டை தாலுகா புளியரை, வீரகேரளம்புதூர் தாலுகா குலையநேரி, ஆலங்குளம் தாலுகா மருதம்புத்தூர் பகுதி–2, சிவகிரி தாலுகா பட்டக்குறிச்சி, கடையநல்லூர் தாலுகா ஊர்மேலழகியான் ஆகிய கிராமங்களில் முகாம் நடக்கிறது.

மேற்கண்ட கிராமங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடக்கிறது. இலவச வீட்டுமனை பட்டாக்கள், முதியோர் உதவி தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவி தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூக பாதுகாப்பு திட்டங்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், நிலத்தாவாக்கள், சாலை வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற சேவைகள் தங்கள் கிராமத்திற்கு கிடைத்திடும் வகையில் வருவாய்த்துறை மககளுக்கு ஆற்றி வரும் சேவையை துரிதப்படுத்தி மக்கள் பயனடைய இதன் மூலம் வழிவகை செய்யப்படுகிறது.

எனவே பொதுமக்கள் இந்த முகாமில் தகுந்த ஆவணங்களுடன், தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை நேரில் அளித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News