செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலம்- தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேறியது

Published On 2020-02-20 07:20 GMT   |   Update On 2020-02-20 09:47 GMT
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
சென்னை:

காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இது தொடர்பாக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்திருந்தார். 

இதுபற்றி சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன? என கேள்வி எழுப்பினார். மேலும், சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பாக சட்ட மசோதா கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். 



இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வெளியிடப்படும் என்றார்.

அதன்பின்னர், முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சிறப்பு வேளாண் மண்டல திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார். ஒரு விவசாயியாக இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார். 

பிற்பகல் இந்த மசோதா மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றப்பட்டது. 
Tags:    

Similar News