செய்திகள்
கைது

புதுவையில் மாணவனை அடித்ததாக கூறி தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்- தந்தை கைது

Published On 2020-02-19 11:10 GMT   |   Update On 2020-02-19 11:10 GMT
தனியார் பள்ளி ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி:

புதுவை கென்னடிநகர் எஸ்.பி. சத்திரம் பகுதியை சேர்ந்தவர் எட்வின்ராஜ் (வயது28). இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தி கொண்டிருந்தார்.

அப்போது அதே பள்ளியை சேர்ந்த மாணவன் ஒருவன் வகுப்பிற்கு தாமதமாக வந்ததாக கூறி ஆசிரியர் எட்வின்ராஜ் அந்த மாணவனை அடித்தார்.

பின்னர் அதே மாணவன் பாடத்தை கவனிக்காமல் சக மாணவனிடம் பேசிக்கொண்டிருந்ததை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதில் கோபித்து கொண்டு அந்த மாணவன் வகுப்பை விட்டு வெளியே சென்று விட்டார்.

இந்த நிலையில் அந்த மாணவனின் தந்தை செல்வகுமார் பள்ளிக்கு வந்து எனது மகனை எதற்காக அடித்தீர்கள் என்று ஆசிரியர் எட்வின்ராஜிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் மதுபோதையில் இருந்த அவர் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும் தான் அணிந்திருந்த பெல்ட்டால் அவரை சரமாரியாக தாக்கினார். இதில் ஆசிரியர் எட்வின்ராஜ் காயமடைந்தார்.

பின்னர் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள் எட்வின்ராஜை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் இதுகுறித்து பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் இரிசப்பன் வழக்குபதிவு செய்து ஆசிரியரை தாக்கிய மாணவனின் தந்தை செல்வகுமாரை கைது செய்தார்.

Tags:    

Similar News