செய்திகள்
செங்கல்சூளையில் தொழிலாளர்கள் மீட்பு

செங்கல்சூளையில் கொத்தடிமையாக இருந்த 250 தொழிலாளர்கள் மீட்பு

Published On 2020-02-19 10:02 GMT   |   Update On 2020-02-19 10:02 GMT
பெரியபாளையம் அருகே செங்கல்சூளையில் கொத்தடிமையாக இருந்த 250 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். தொழிலாளிக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர், அவரது உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் குழுவின் செயலாளர் சரஸ்வதி தலைமையில் அதிகாரிகள் பெரியபாளையம் அருகே உள்ள புன்னப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் தொழிற்சாலையில் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு கொத்தடிமையாக இருந்த சுமார் 250-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.

மேலும் அங்கு தொழிலாளிக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர் பி.ஏ. முடித்துவிட்டு மருத்துவம் பார்த்த ஒடிசாவை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த், பத்தாம் வகுப்பு படித்துவிட்டு அவருக்கு உதவியாளராக இருந்த பிக்ரம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த ஆய்வின்போது சமூக நலத்துறை, தொழிலாளர் நலத்துறை, தொழில்துறை, ஊத்துக்கோட்டை தாசில்தார் முருகநாதன் தலைமையில் வருவாய் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகள், துறை அதிகாரிகள், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் போலீசார் பங்கேற்றனர்.

தொழிற்சாலையில் உரிய அனுமதியின்றி மருந்துகள், மாத்திரைகள், அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட அனைவரும் ஒடிசா மாநிலம் பீலாங் கீர் மாவட்டத்தை சேர்ந்த வர்கள். அவர்கள் அனை வரும் லாரிகள் மூலம் அழைத்து செல்லப்பட்டு ஊத்துக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக்கூட்டம் சங்கத்தின் தலைவர் நாகேஸ்வரராவ் தலைமையில் நடைபெற்றது. இதில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.

அப்போது, பல்வேறு இன்னல்களுக்கு இடையே செங்கல் தொழிற்சாலையை நடத்தி வருவதாகவும், பல லட்சம் செலவில் தொழில் செய்து வரும் நிலையில் அதிகாரிகளும், தொண்டு நிறுவனங்களும் தலையிட்டு செங்கல் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி வருவதாகவும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

இன்னல்கள் இன்றி தொழில் செய்ய மாவட்ட கலெக்டரும், தமிழக முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செங்கல் தொழில் செய்வதில் உள்ள பல்வேறு வகையான பிரச்சினை குறித்து விளக்கி கூற திருவள்ளூர் மாவட்ட கலெக்டரை இன்று சங்க நிர்வாகிகள் சந்திக்க முடிவு செய்துள்னர். இதனால் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவி வருகிறது.


Tags:    

Similar News