செய்திகள்
சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சீனா கப்பல்

சென்னை துறைமுகம் வந்த சீனா கப்பலில் 2 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி?

Published On 2020-02-19 09:53 GMT   |   Update On 2020-02-19 09:53 GMT
சென்னை துறைமுகம் வந்த சீனா கப்பலில் 2 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 2 ஊழியர்களும் தனிமைபடுத்தப்பட்டு கப்பலிலேயே தனி அறையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ராயபுரம்:

சீனாவில் பரவி உள்ள கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலில் சீனாவில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்குதலில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்து சோதனை செய்து அனுமதித்து வருகின்றன.

இதேபோல் இந்தியாவிலும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் விமான நிலையம், துறைமுகம் பகுதிகளில் சோதனைக்கு பிறகே வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை.

இந்த நிலையில் சீனாவில் இருந்து சென்னை துறைமுகம் வந்த சரக்கு கப்பலில் உள்ள 2 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் இருந்து 10 ஆயிரம் டன் இரும்பு பொருட்களை ஏற்றிய ‘மேக்னட்’ என்ற சரக்கு கப்பல் நேற்று மாலை சென்னை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. அதில் 19 ஊழியர்கள் இருந்தனர்.

அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது 2 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிந்தது. காய்ச்சல் மற்றும் சளியால் அவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதையடுத்து அந்த 2 ஊழியர்களும் தனிமைபடுத்தப்பட்டு அவர்கள் வந்த கப்பலிலேயே தனி அறையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மற்ற 17 ஊழியர்களும் கப்பலிலேயே தனியாக தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள 2 பேரின் சளி மற்றும் ரத்த மாதிரி சென்னை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். சீனா சரக்கு கப்பலை திருப்பி அனுப்பப்படுமா? என்பது இதன் பின்னரே தெரிய வரும்.

இதற்கிடையே சீனா சரக்கு கப்பலை சுற்றிலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த கப்பலில் உள்ள ஊழியர்கள் கீழே இறங்க அனுமதி மறுத்துள்ளனர்.

மேலும் துறைமுகத்தில் உள்ள ஊழியர்கள் சீனா கப்பல் அருகே செல்லாதவாறு அதனை சுற்றிலும் தடுப்பு அபாய கயிறுகள் கட்டப்பட்டுள்ளது. கப்பலை தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சீனா கப்பல் அருகே கார் ஏற்றி வந்த வேறொரு சரக்கு கப்பல் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதி காரணமாக அந்த கப்பலில் இருந்து கார்களை இறக்க ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனால் கார்களை இறக்கும் பணி தடை பட்டுள்ளது. இச்சம்பவத்தால் சென்னை துறைமுகம் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.



Tags:    

Similar News