செய்திகள்
ஆடு திருடியவர்களை படத்தில் காணலாம்.

கூடங்குளம் அருகே லோடு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஆடுகள் திருடிய 2 பேர் கைது

Published On 2020-02-19 04:34 GMT   |   Update On 2020-02-19 04:34 GMT
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே லோடு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஆடுகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கூடங்குளம்:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள சங்கனேரி கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் சொந்தமாக 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 10-ந்தேதி இசக்கிமுத்து அதே ஊரை சேர்ந்த முருகன் என்பவரின் தோட்டத்தில் ஆட்டுக்கிடை போட்டிருந்தார். சொந்த ஊர் என்பதால் அவர் ஆடுகளை கிடையில் போட்டு விட்டு, இரவு தூங்குவதற்காக வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இசக்கிமுத்து மறுநாள் காலை கிடைக்கு சென்றார். அப்போது அவர் வளர்த்து வந்த ஆடுகளில் 22 ஆடுகள் காணாமல் போனது. உடனே அதிர்ச்சியடைந்த அவர் மர்மநபர்கள் யாரோ தனது ஆடுகளை திருடி சென்று விட்டனர் என்பதை அறிந்தார்.

பின்னர் அவர் கூடங்குளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இசக்கிமுத்து இந்த சம்பவத்தில் முருகனின் மகன் சுடலையாண்டி(வயது 45) ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்தார். இது குறித்து போலீசாரிடமும் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று போலீசார் திசையன்விளை அருகே உள்ள மணலிவிளையை சேர்ந்த இசக்கி என்பவரின் மகன் முருகேசன் (26) மற்றும் சுடலையாண்டியை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள ஒருவரது லோடு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து, இசக்கிமுத்துவின் ஆடுகளை திருடி சென்று, அவற்றை சந்தையில் விற்றது தெரியவந்தது.

மேலும் அந்த பகுதியை சேர்ந்த பலரது ஆடுகளை இருவரும் திருடி சென்று சந்தையில் விற்றுள்ளனர் என்பதும், ஆடுகளை விற்ற பணத்தில் இருவரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News