செய்திகள்
விபத்து

வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல்- நர்சு பலி

Published On 2020-02-17 16:07 GMT   |   Update On 2020-02-17 16:07 GMT
வில்லியனூர் அருகே இன்று காலை கணவனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற ஜிப்மர் நர்சு வேன் மோதி பரிதாபமாக இறந்து போனார்.
வில்லியனூர்:

திருக்கனூர் அருகே விநாயகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயகலா (வயது38). இவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் புதுவையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். வாரவிடுமுறை நாட்களில் அன்பழகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருபுவனை பாளையம் பெருமாள் நகரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்று தங்குவது வழக்கம். அதுபோல் நேற்று அன்பழகன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் மாமியார் வீட்டில் தங்கினார்.

இன்று காலை மகன்களை பள்ளிக்குகொண்டு சென்று விடவும், மனைவி விஜயகலாவை ஜிப்மர் ஆஸ்பத்திரி பணிக்கு அழைத்து செல்லவும் மாமியார் வீட்டில் இருந்து அன்பழகன் அவர்களை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு வந்தார். 

அரியூர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது முன்னால் சென்ற மினிவேனை தனியார் பஸ் முந்தி செல்ல முயன்றது. அந்த நேரத்தில் திடீரென கார் எதிரே வரவே அதன் மீது மோதாமல் இருக்க தனியார் பஸ் டிரைவர் பஸ்சை இடது புறமாக திருப்பினார்.

அப்போது எதிர் பாராதவிதமாக தனியார் பஸ் அருகில் சென்ற மினிவேன்மீது மோதியது. இதையடுத்து அந்த மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து அன்பழகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த விஜயகலா மீது மினிவேன் முன்சக்கரம் ஏறி இறங்கியது.

இதில் உடல்நசுங்கி விஜயகலா படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே விஜயகலா பரிதாபமாக இறந்து போனார். இந்த விபத்தில் மினிவேன் மோதியதில் அரியூரை சேர்ந்த ஜாபர் என்பவர் காயம் அடைந்தார். அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் அன்பழகன் மற்றும் அவரது குழந்தைகள் காயமின்றி உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஏட்டு சந்திரகுமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன்-குழந்தைகள் கண் முன் ஜிப்மர் நர்சு விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News