செய்திகள்
கைது

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு: மேஜிக் பேனாவை தயாரித்தவர் சென்னையில் கைது

Published On 2020-02-17 06:04 GMT   |   Update On 2020-02-17 06:04 GMT
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டுக்கு பயன்படுத்தப்பட்ட அழியும் மை கொண்ட பேனாவை தயாரித்து வழங்கிய நபரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை:

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாகவும், கிராம நிர்வாக அதிகாரி தேர்தலில் நடைபெற்றுள்ள மோசடி பற்றியும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்விலேயே முறைகேடு நடைபெற்றது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2017-ம் ஆண்டு நடந்த குரூப்-2ஏ தேர்விலும் மோசடியாக பலர் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

2016-ம் ஆண்டு நடந்த கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் பலர் மோசடியாக வேலையில் சேர்ந்துள்ளனர். சென்னை முகப்பேரை சேர்ந்த தரகர் ஜெயக்குமாரிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து முறைகேட்டில் பலர் பணியில் சேர்ந்துள்ள தகவல் பற்றி டி.என்.பி.எஸ்.சி. சார்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

தேர்வு முறைகேடு தொடர்பாக கடந்த 14-ந்தேதி வரையில் 49 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தனுடன் இணைந்து தரகர் ஜெயக்குமார் தேர்வர்களிடம் பணவசூலில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இதில் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியானது. விடைத்தாள்களை திருத்துவதற்கு உடந்தையாக இருந்த டிரைவர்களும் பிடிபட்டனர். விடைத்தாள்களை திருத்தி கொடுத்த தமிழ் ஆசிரியரும் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

அவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசர் முடிவு செய்துள்ளனர். இன்று அல்லது நாளை அவர் காவலில் எடுக்கப்பட உள்ளார்.

இந்தநிலையில் தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை புரசைவாக்கத்தில் மேலும் ஒருவர் பிடிபட்டுள்ளார். அவரது பெயர் அசோக் என்று தெரிய வந்துள்ளது. அவர் தேர்வு முறைகேட்டிற்காக தானாக அழியும் மை உடைய பேனாவை தயாரித்து தரகர் ஜெயக்குமாருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவர் ஜெயக்குமாரிடம் எவ்வளவு பணம் பெற்றார்? முறைகேட்டிற்கு வேறு ஏதேனும் உதவி செய்துள்ளாரா?  என்பது தொடர்பாக அசோக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் வைத்து அசோக்கிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று மாலையில் அசோக் பற்றிய விரிவான தகவல்களை போலீசார் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News