செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வேளாண் மண்டலத்திற்காக பாராளுமன்றத்தில் திமுக குரல் கொடுக்காதது ஏன்?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

Published On 2020-02-17 05:25 GMT   |   Update On 2020-02-17 06:38 GMT
வேளாண் மண்டலம் கொண்டுவர பாராளுமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுக்காதது ஏன்? என்று துரைமுருகனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (தி.மு.க.) ஒரு கேள்வி எழுப்பினார்.

அப்போது விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு கொடுப்பதில் அரசு அக்கறை காட்டவில்லை. தட்கல் முறையில் ரூ.3 லட்சம் கட்டினால் தான் மின் இணைப்பு கொடுப்பதில் அதிக அக்கறை காட்டுகிறது. விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு முறையாக கொடுக்கப்படுகிறதா? என கேட்டார்.

அமைச்சர் தங்கமணி:-

நமது முதல்-அமைச்சர், விவசாயி வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு இந்த அரசு அதிக அக்கறை காட்டுகிறது. ஆண்டுதோறும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதனால் மின் இணைப்பு கேட்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே உடனே வேண்டும் என்பவர்கள் தட்கல் முறையில் மின் இணைப்பு பெறலாம். யாரையும் தட்கல் முறையில் மின் இணைப்பை பெற கட்டாயப்படுத்தவில்லை.

எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்:-

முதல்-அமைச்சர் விவசாயி என்கிறீர்கள். எனவே இன்னும் அதிக கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும்.



அமைச்சர் தங்கமணி:-

விவசாயிகள் மீது முதல்-அமைச்சர் அக்கறை கொண்டதால் தான் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், குடிசைகளுக்கு இலவச மின்சாரம் என்று ஏராளமாக மானியம் வழங்க வேண்டி இருப்பதால் இந்த துறைக்கு முதல்-அமைச்சர் அதிக தொகையை ஒதுக்கி இருக்கிறார்கள். ஆனால் அதையும் குறை கூறுகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் மின்சாரமே இல்லை.

துரைமுருகன்:-

எங்கள் உறுப்பினர் விவசாயிகளுக்கு அதிக அளவில் மின்சார இணைப்பு வழங்க வேண்டும் என்று தான் குறிப்பிட்டார். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பதை நாங்களும் வரவேற்கிறோம்.

ஆனால் அதை முறைப்படி சட்டமன்றத்தில் தீர்மானமாக கொண்டுவர வேண்டும் என்று தான் கேட்கிறோம்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருக்கிறோம். நாங்கள் பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்த போது தமிழ்நாட்டு மக்களுக்காக நாங்கள் எதுவுமே கேட்கவில்லை என்று தி.மு.க. குறை கூறியது.

இப்போது பாராளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் தான் அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்கள் என்றைக்காவது காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க குரல் கொடுத்தது உண்டா? தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று குரல் கொடுத்திருக்கிறார்களா?

துரைமுருகன்:-

நீங்கள் எதையாவது அறிவித்து விட்டு நாங்கள் பேச வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள். எங்களுடன் கலந்து பேசி இருந்தால் நாங்கள் தேவையானவற்றை செய்து இருப்போம். தற்போது பாராளுமன்றத்தில் நாங்களும் மத்திய அரசும் எதிரும், புதிருமாக இருக்கிறோம்.

ஓ.பன்னீர் செல்வம்:-

14 ஆன்டுகளாக தி.மு.க.வும், காங்கிரசும் மத்தியில் ஒன்றாக இருந்தது. ஆனால் காவிரி மேலாண்மை தீர்ப்பையே அரசு பட்ஜெட்டில் கொண்டுவர முடியவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு 2013-ல் தான் மீண்டும் நீதிமன்றம் சென்று காவிரி மேலாண்மை தீர்ப்பை பெற்றார்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
Tags:    

Similar News