செய்திகள்
ஆவின் பால்

சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Published On 2020-02-17 02:51 GMT   |   Update On 2020-02-17 02:51 GMT
ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பதால் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னை:

ஆவின் பால் நிறுவனம் தனியார் டேங்கர் லாரிகள் மூலமாக தமிழகத்தில் ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர் பால் சப்ளை செய்து வருகிறது. இதற்காக 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனியார் டேங்கர் லாரிகளுடன் வாடகை ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டுடன் ஒப்பந்தம் நிறைவடைந்த பின்னர் இதுவரை மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.

இதனை கண்டித்து கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் ஒப்பந்த லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் ஆவின் பால் சப்ளை செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நுகர்வோருக்கு தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பால்வளத்துறை ஆணையர் மா.வள்ளலார் தெரிவித்திருந்தார்.

சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்துதான் சென்னைக்கு அதிக அளவில் பால் டேங்கர் லாரிகளில் கொண்டுவரப்படுகிறது. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பால் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

தமிழ்நாடு பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளர் வைத்தியநாதன் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒப்பந்தத்தை புதுப்பிக்காததால் 1,500 பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஒப்பந்தத்தை நீட்டிக்கும் வரை லாரிகளை இயக்கப்போவது இல்லை. ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்தத்தில் கிறிஸ்டி நிறுவனம் தலையிட்டு முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. தற்போது பாதுகாப்பு இல்லாத, தரமற்ற லாரிகளில் பால் கொண்டு செல்கிறார்கள். இதனால் உடல்நல கோளாறுகள் ஏற்படும்.

வேலைநிறுத்தத்தை திரும்பப்பெறாவிட்டால் ‘எஸ்மா’ சட்டம் பாயும் என்று மிரட்டுகிறார்கள். அமைச்சர் தலையிட்டு கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தம் தொடரும். இந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் ஆவின் நிறுவனத்தில் இருந்து தினமும் 1½ லட்சம் லிட்டர் பால் 30 டேங்கர் லாரிகள் மூலமாக சென்னைக்கு அனுப்பப்படும். 15 டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் எஞ்சிய 15 டேங்கர் லாரிகள் மற்றும் 15 தனியார் வாகனங்களிலும் பால் தங்குதடையின்றி சென்னைக்கு அனுப்பப்படுவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சேலம் ஆவின் பொது மேலாளர் விஜய்பாபு கூறுகையில், “ஆவினுக்கு சொந்தமான லாரிகள் மூலமாகவும், தனியார் வாகனங்கள் மூலமாகவும் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பால் அனுப்பப்பட்டு வருகிறது” என்றார்.

Tags:    

Similar News