செய்திகள்
திருமாவளவன் எம்.பி. பேசிய காட்சி.

தடியடி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- திருமாவளவன் எம்.பி. பேட்டி

Published On 2020-02-16 14:56 GMT   |   Update On 2020-02-16 16:04 GMT
சென்னையில் அமைதியாக போராடி கொண்டிருந்த இஸ்லாமிய சமூகத்தினர் மீது தடியடி நடத்தியவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார்.
ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூரில் விடுதலை சிறுத்தை கட்சி மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதன் தலைவர் திருமாவளவன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம் மட்டுமல்லாமல் அகில இந்திய அளவில் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். வட இந்திய மாநிலங்களில் இஸ்லாமிய மக்களை பொறுத்த வரையில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. தமிழகத்தில், மிகவும் அமைதியாக ஒருமாத காலத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆனால் சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக போராடி கொண்டிருந்த இஸ்லாமிய சமூகத்தினர் மீது காவல்துறை காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். இப்படி ஒரு சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு காவல் துறையினர் காரணமாக இருப்பது வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது. 

வண்ணாரப்பேட்டை தடியடி தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளை பணியிடை நீக்க வேண்டும். சிஏஏ மற்றும் என்டிஆர் என்பது தமிழ்நாட்டு பிரச்சனை அல்ல தேசிய பிரச்சனை. முஸ்லிம்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகத்திற்கான பிரச்சினை. ஆகவே காவல்துறை ஜனநாயக முறைப்படி இத்தகைய போராட்டங்களுக்கு அனுமதி தந்து உரிய கட்டுப்பாடுகளுடன் சட்டத்திற்கு உட்பட்டு அனுமதி அளிக்க வேண்டும். வரும் 22ம் தேதி திருச்சிராப்பள்ளியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தேசம் காப்போம் பேரணி நடைபெற உள்ளது. 

மத்திய அரசின் குடியுரிமைதிருத்த சட்டத்தை நிறைவேற்ற கூடாது என்று இந்த பேரணியில், வலியுறுத்தி ஜனநாயக சக்திகள், கட்சி சார்பற்ற அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இட ஒதுக்கீடு குறித்துஉச்சநீதிமன்ற கருத்து மிகவும் ஆபத்தானது. அது தலித் மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டை மட்டும் பாதிக்கப்படுவது அல்ல ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு எதிரானது. வேலைவாய்ப்பு அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்தியே தீர வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு ஆணையிட முடியாது என்ற உச்சநீதிமன்ற கருத்து, அனைத்து ஒடுக்கப்பட்ட சிறுபான்மை பிரிவினருக்கான எதிரானதாக உள்ளது. இது குறித்து திராவிட கட்சி தலைவர் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார். தோழமை கட்சியினரோடு  இணைந்து மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News