செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

காலை உணவு திட்டத்துக்கு கவர்னர் ரூ.5 கோடி நிதி- ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு

Published On 2020-02-15 09:19 GMT   |   Update On 2020-02-15 09:19 GMT
காலை உணவு திட்டத்துக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரூ.5 கோடி நிதி வழங்கி உள்ளதற்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை:

இந்தியா முழுவதும் ‘அட்சய பாத்திரா’ அறக்கட்டளை தினந்தோறும் 16 ஆயிரத்து 856 பள்ளிகளில் படிக்கும் 18 லட்சத்து 2 ஆயிரத்து 517 குழந்தைகளுக்கு உணவு அளித்து வருகிறது.

இந்த அறக்கட்டளை சென்னை மாநகராட்சியுடன் இணைந்து காலை உணவு திட்டத்தை 2019-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

சென்னையில் உள்ள 24 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரத்து 785 மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.

அட்சய பாத்திரா அறக்கட்டளைக்கு திருவான்மியூரில் ஏற்கனவே ஒரு சமையல் கூடம் உள்ளது. அங்கிருந்து பள்ளிகளுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது.

இப்போது ஆயிரம் விளக்கு பகுதி கிரீம்ஸ் சாலையில் சமையல் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அட்சய பாத்திரா விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தற்போது தமிழ்நாட்டில் 43,283 பள்ளிகளில் தினந்தோறும் 49,85,335 மாணவ, மாணவிகளுக்கும், குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.

சத்துணவுத் திட்டத்தின் காரணமாக பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை கணிசமாக அதிகரித்ததுடன், பள்ளிகளிலிருந்து மாணவர்களின் இடைநிற்றல் கணிசமாகக் குறைந்துள்ளது.

தமிழகத்திலுள்ள திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள், பசியாறி வயிறும் மனமும் குளிர ஆண்டவனை தரிசித்து அகமகிழ்ந்திட, 754 திருக்கோயில்களில் தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை அம்மா செயல்படுத்தினார்கள். இதனால் தினந்தோறும் 65,000 பக்தர்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.

மாணவச் செல்வங்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் பசிப்பிணியைத் தீர்த்திட, எம்ஜிஆரும், அம்மாவும் வகுத்துத்தந்த பாதையில், அவர்கள் தொடங்கிய திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொய்வின்றி செயல்படுத்தி வருகிறார்.

ஏற்கனவே இந்த அறக்கட்டளை அமைப்பு, தமிழகத்தில், சென்னை மாநகராட்சியின் உதவியுடன், சென்னையில் 24 பள்ளிகளில் பயிலும் 5785 குழந்தைகளுக்கு தினந்தோறும் காலை உணவினை அளித்து வருவது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாகும்.

இந்த மனித நேயப்பணியின் தொடர்ச்சியாக, இன்று பூமி பூஜை போடப்படும், நவீன வசதிகளுடன் அமையவிருக்கும் சமையற்கூடம் வாயிலாக சென்னை மாநகராட்சியின் 35 பள்ளிகளைச் சேர்ந்த 12000 பிள்ளைகளுக்கு சத்தான காலை உணவினை வழங்க அட்சய பாத்திரா அமைப்பு திட்டமிட்டுள்ளது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதற்காக, அட்சய பாத்திரா அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீ மதுபண்டிட் தாசாவுக்கும், அறக்கட்டளையின் ஏனைய பொறுப்பாளர்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



இந்த மகத்தான மனித நேயப் பணியை வெற்றிகரமாகச் செயல்படுத்திட, நமது கவர்னர், தனது விருப்ப நிதியிலிருந்து, 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில், குறிப்பாக சென்னை மாநகராட்சியின், பள்ளி மாணவச் செல்வங்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, கவர்னர் அளித்துள்ள இந்த நிதியுதவிக்கு, எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக கண்ணோட்டத்துடன், இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்விற்கு அட்சய பாத்திரா அறக்கட்டளை மேற்கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் பாராட்டுக்குரியதாகும். இத்தகைய மக்கள் சேவையை ஆற்றிவரும் அட்சய பாத்திராஅறக்கட்டளைக்கு அம்மா அரசு, ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும்.

அட்சய பாத்திரா அறக்கட்டளை போன்று, பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பணிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News