செய்திகள்
தமிழக சட்டசபை

அனைத்து அரசு உயர்நிலை-மேல்நிலை பள்ளிகளிலும் நவீன ஆய்வகம்

Published On 2020-02-14 11:09 GMT   |   Update On 2020-02-14 11:09 GMT
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் நவீன ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை வழங்குவதற்கு தமிழக அரசு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது. எனவே அனைத்துத் துறைகளுடன் ஒப்பிடும்பொழுது பள்ளிக் கல்வித் துறைக்கு வரவு- செலவுத் திட்டத்தில் அதிகபட்சமாக 34,181.73 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புத்தகப்பைகள், பள்ளிச் சீருடைகள், காலணிகள், குறிப்பேடுகள், பாடப்புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள் மற்றும் வண்ணப் பென்சில்கள் ஆகியயை வழங்குவதற்கு 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில் 1,018.39 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு அரசால் மடிக்கணினி வழங்கப்படும். இதற்கென, 2020-21-ம் ஆண்டிற்கான வரவு- செலவு திட்ட மதிப்பீட்டில் 966.46 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

158 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 277.88 கோடி ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை, ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் மேற்கொள் நபார்டு வங்கி அண்மையில் ஒப்புதல் வழங்கி உள்ளது.

கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 520.13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்படுகின்றன.

நடப்புக் கல்வியாண்டில் 76,927 மாணவ-மாணவியர்கள் கட்டிட கல்வி உரிமை சட்டத்திற்கு கீழ் தனியார் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை, 644.69 கோடி ரூபாய் பள்ளிக் கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

ஏழை மாணவர்களும் உயர் கல்வியினைப் பெறும் வகையில் முதல் தலைமுறை மாணவர்களின் கல்விக் கட்டணச் சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும். 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 506.04 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், உயர் கல்வித்துறைக்கு 5,052.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News