செய்திகள்
மருத்துவ காப்பீட்டு

மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

Published On 2020-02-14 08:34 GMT   |   Update On 2020-02-14 08:34 GMT
மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு, காப்பீட்டுத் தொகை ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரண்டு பேறுகாலம் வரை 18,000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் மட்டுமே 99.9 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனையில் நடைபெறுவது, இத்திட்டத்தின் வெற்றியை சுட்டிக்காட்டுகிறது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தினைச் செயல்படுத்த 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில் 959.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.



அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தவும், தாய்-சேய் சுகாதார சேவைகளை வழங்கவும், 2,857 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கியின் நிதியுதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் இதற்கு 260.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ், 1.59 கோடி குடும்பங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், திட்டம் தொடங்கப்பட்ட 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை, 41.12 லட்சம் பயனாளிகள் 6,601.59 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர்.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன், மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு, காப்பீட்டுத் தொகை ஆண்டிற்கு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்காக ரூ.1033.29 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு 15,863.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News