செய்திகள்
அம்மா உணவகம்

அம்மா உணவகத்தை செயல்படுத்த சிறப்பு ஏற்பாடு

Published On 2020-02-14 06:17 GMT   |   Update On 2020-02-14 06:17 GMT
2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் அம்மா உணவகத் திட்டத்துக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2013-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி அம்மா உணவகங்களை திறந்து வைத்தார். இந்த முன்னோடி திட்டம் உலக அளவில் நன்மதிப்பை பெற்றுள்ளதோடு இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் இதை பின்பற்றி செயல்படுத்தி வருகின்றன.



இம்முன்னோடி திட்டத்துக்கு மேலும் புத்துணர்ச்சியூட்டும் பொருட்டும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மீதான நிதிச்சுமையை குறைப்பதற்கும், அம்மா உணவக திட்டத்தை செயல்படுத்துவதற்காக லாப நோக்கமற்ற ஒரு சிறப்பு நோக்கு முகமையை உருவாக்க அரசு முடிவெடுத்துள்ளது.

அம்மா உணவகங்களை அதிக அளவில் பயன்படுத்தி வரும் கட்டுமான பணியாளர்களை கவனத்தில் கொண்டு அவர்கள் தங்கும் மற்றும் பணிபுரியும் இடங்களுக்கு அம்மா உணவகம் உணவு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும்.

இத்திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்காக பெருநிறுவன சமூகப் பொறுப்பு பங்களிப்பு மற்றும் நன்கொடை பங்களிப்புகளை இந்த சிறப்பு நோக்க முகமை சேகரிக்கும். அம்மா உணவகங்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்களை இந்த அரசு தொடர்ந்து வழங்கும். வருவாய் வரவுகள் பெறப்பட்ட பங்களிப்புகள், நன்கொடைகள் ஆகியவற்றுக்கும் அதன் செலவினத்துக்கும் இடையேயான பற்றாக்குறையை சரிசெய்வதற்கு அரசு நிதியுதவி அளிக்கும். 2020-21-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில் அம்மா உணவகத் திட்டத்துக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News