செய்திகள்
டிஎன்பிஎஸ்சி

குரூப்-4 தேர்வு முறைகேடு- செஞ்சியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் கைது

Published On 2020-02-14 04:59 GMT   |   Update On 2020-02-14 11:22 GMT
குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக செஞ்சியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகளில் நடைபெற்ற முறைகேட்டை தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் மோசடி நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

2016-ம் ஆண்டு கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான தேர்வை எழுதிய பலர் முறைகேடான வழியில் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

தரகர் ஜெயக்குமாரிடம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையில் பணம் கொடுத்து பலர் மோசடியாக வேலையில் சேர்ந்துள்ளனர். இதுபற்றியும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கிராம நிர்வாக அதிகாரி தேர்வில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்த ஊத்துக்கோட்டை அருகில் உள்ள புன்னப்பாக்கம் கிராம நிர்வாக அதிகாரி சுயம்பு ராஜன், அதே பகுதியில் உள்ள பனையஞ்சேரி கிராம நிர்வாக அதிகாரி பன்னீர் செல்வம் மற்றும் இன்னொரு கிராம நிர்வாக அதிகாரியான கபிலன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மேலும் ஒரு கிராம நிர்வாக அதிகாரி இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது பெயர் அமல்ராஜ்.

29 வயதே ஆன அவர் செஞ்சி அருகே உள்ள அணிலாடி கிராமத்தை சேர்ந்தவர். அருகில் உள்ள அத்தியூர் கிராம நிர்வாக அலுவலராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில்தான் அவரை போலீசார் இன்று கைது செய்து விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அமல்ராஜூம், தரகர் ஜெயக்குமாரிடம் லட்சக் கணக்கில் பணம் கொடுத்து பணியில் சேர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இதுபற்றி எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்று மாலையில் அமல்ராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ மோசடி தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தி வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் நேற்று 2 பெண் ஊழியர்களை பிடித்தனர். அவர்களது பெயர் பூர்ணிமாதேவி, அனிதா இருவரும் தலா ரூ.12 லட்சம் கொடுத்து சென்னையில் உள்ள பத்திரப்பதிவு ஐ.ஜி. அலுவலகத்தில் பணியில் சேர்ந்துள்ளனர்.

இதன்மூலம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News