செய்திகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் கைது

Published On 2020-02-13 09:50 GMT   |   Update On 2020-02-13 09:50 GMT
குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை:

குரூப்-4, குரூப் 2ஏ, கிராம நிர்வாக அதிகாரி தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள்களை தரகர் ஜெயக்குமார், டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம்காந்தன் ஆகியோர் திருத்தி முறைகேடு செய்தது தெரியவந்தது.

கடந்த ஆண்டு நடந்த குரூப்-4 தேர்வில் நடைபெற்ற இந்த முறைகேட்டை போல 2017-ம் ஆண்டு குரூப்-2 ஏ தேர்விலும் பலர் மோசடியாக தேர்ச்சி பெற்று இருந்தனர். இப்படி தேர்வான 42 பேரின் பட்டியலை வைத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 19 பேரும், குரூப்-2ஏ தேர்வு மோடியில் ஈடுபட்டதாக 19 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கிராம நிர்வாக அதிகாரிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்தம் 41 பேர் சிக்கியுள்ளனர்.



இந்த நிலையில் குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் மேலும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தரகர் ஜெயக்குமாருடன் சேர்ந்து விடைத்தாள்களை திருத்துவதற்கு இவர் உடந்தையாக இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. இன்று மாலையில் கைது பற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவிக்க உள்ளனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான தரகர் ஜெயக்குமாரின் போலீஸ் காவல் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ள ஜெயக்குமார் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார். விடைத்தாள்களை திருத்துவதற்கு ஜெயக்குமார், ஓம்காந்தன் இருவரும் தங்களது கார்களை பயன்படுத்தி உள்ளனர்.

இந்த கார்களும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கின் முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. தரகர் ஜெயக்குமாரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணமும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
Tags:    

Similar News