செய்திகள்
மாயமான திருமங்கை ஆழ்வார் சிலை புகைப்படம்

கும்பகோணத்தில் மாயமான திருமங்கை ஆழ்வார் சிலை கண்டுபிடிப்பு

Published On 2020-02-13 03:33 GMT   |   Update On 2020-02-13 03:33 GMT
கும்பகோணத்தில் மாயமான திருமங்கை ஆழ்வார் சிலை, லண்டன் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்துள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
சென்னை:

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் உள்ள சவுந்தர்ராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான திருமங்கை ஆழ்வார் உலோகச்சிலை 1957-ம் ஆண்டில் இருந்து 1967-ம் ஆண்டுக்குள் மாயமாகிவிட்டதாக அந்த கோவிலின் செயல் அலுவலர் ராஜா, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு குழுவிடம் புகார் செய்தார்.

அதன் மீது விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் உத்தரவின்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அன்பு மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதில், மாயமான திருமங்கை ஆழ்வார் சிலையின் புகைப்படம், தற்போது லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள திருமங்கை ஆழ்வார் புகைப்படத்துடன் 100 சதவீதம் ஒத்துபோவது தெரியவந்தது.

லண்டன் அருங்காட்சியகத்தில் இருந்து அந்த சிலையை மீட்டு கொண்டுவந்து மீண்டும் பொதுமக்கள் வழிபாட்டுக்காக அந்த கோவிலில் ஒப்படைக்கவும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலை கடத்தல் குற்றவாளிகளை பிடிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News