செய்திகள்
பயிர்களை சேதப்படுத்திய பொக்லைன் எந்திரம் வயலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காட்சி.

விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க முயற்சி- விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு

Published On 2020-02-12 09:15 GMT   |   Update On 2020-02-12 09:15 GMT
தூத்துக்குடி பகுதியில் விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியின்போது நெற்பயிர்கள் சேதமடைந்ததையடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முள்ளக்காடு:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி வரை இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் (ஐ.ஓ.சி.எல்.) நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப்பாசனத்தை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள், விவசாயம் செய்து வருகிறார்கள்.

தாமிரபரணி வடகால் பாசனத்திற்குட்பட்ட குலையன்கரிசல், பொட்டல்காடு கிராமத்தில் 120 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்கள் வழியாக இந்த எரிவாயு குழாய் பதிக்கும் பாதைகள் வருகிறது. பொட்டல்காடு அரசு உயர்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம், குடியிருப்பு பகுதி அருகிலும் எரிவாயு குழாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே இப்பகுதியின் வழியாக எரிவாயு குழாய் அமைத்தால் விவசாய நிலங்கள் அழிவதுடன், குழாய்களில் கசிவு உள்ளிட்ட விபத்துகள் ஏற்படும் என விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். குலையன்கரிசல் பகுதியில் உள்ள விளைநிலங்களில் தற்போது நெற்பயிர்கள் பொதி பட்டத்தை தாண்டி சில நாட்களில் அறுவடை செய்வதற்காக தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட 120 ஏக்கர் விளைநிலங்கள் உள்ள பகுதியில் நேற்று எரிவாயு ஒப்பந்ததாரர்கள் பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த வயல்வெளிகளில் நன்கு வளர்ந்திருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தது.

இதையறிந்த சுற்று வட்டார பகுதி விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் சுனித், அரவிந்த் உள்ளிட்டவர்கள் தலைமையில் திரண்டு வந்து குழாய் பதிப்பில் ஈடுபட்ட பகுதியில் முற்றுகையிட்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பயிற்சி ஏ.எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், ரூரல் டி.எஸ்.பி. கலைக்கண்ணன், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகையில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள் 120 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது. இதில் எரிவாயு குழாய் பதிக்கும் ஒப்பந்ததாரர்கள் திடீரென புகுந்து பணியில் ஈடுபட்டதால் ஏராளமான பயிர்கள் நாசமடைந்துள்ளன என புகார் தெரிவித்தனர்.

இதற்கு போலீசார், 120 ஏக்கரில் ஒரு ஏக்கர் நிலங்களில் நெற்பயிர்கள் நாசப்படுத்தியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அந்த நிலத்தின் உரிமையாளர் புகார் தெரிவித்தால் நெற்பயிர்களை நாசம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். போலீசாரின் இந்த உறுதியை ஏற்று விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News