செய்திகள்
சட்டசபையில் பேசிய நாராயணசாமி

எனது ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தாலும் கவலையில்லை- நாராயணசாமி

Published On 2020-02-12 08:30 GMT   |   Update On 2020-02-12 08:30 GMT
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தாலும் கவலையில்லை என புதுவை முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக புதுவை சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிஏஏ, தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டை திரும்பப்பெற வலியுறுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

‘மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எந்த ஒரு சட்டத்தையும் அரசு ஏற்றுக் கொள்ளாது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்காக எங்கள் ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தாலும் கவலையில்லை, அதனை சந்திக்க தயாராக இருக்கிறோம்’ முதலமைச்சர் நாராயணசாமி பேசினார். 



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, எதிர்க்கட்சியான என்ஆர் காங்கிரசின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினார்.

‘பிரச்சனைகளை பேசுவதற்குதான் சட்டமன்றம் உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சட்டமன்றத்திற்கு வந்து தனது கருத்தை பதிவு செய்ய வேண்டும். ஆனால், சட்டமன்றத்திற்கு வராமல், மக்கள் பிரச்சனைகளை பேசாமல் மக்கள் தங்களுக்கு ஒட்டு போட காத்திருப்பதாக கூறுவது கேலிக்கூத்து. எனவே. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் விஷயத்தில் என்ஆர் காங்கிரசின் நிலை என்ன? என்பதை தெரிவிக்க வேண்டும்.’ என நாராயணசாமி கூறினார். 

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக விவாதிக்க புதுவை சட்டமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் கிரண்பேடி, புதுவை முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதனையும் மீறி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், புதுவை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுவை அரசின் தீர்மானம் குறித்து மத்திய அரசுக்கு ஆளுநர் கிரண் பேடி அறிக்கை அனுப்பி, நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வாய்ப்பு உள்ளது. இந்த விவகாரத்தால் பெரிய அளவில் பிரச்சினை வெடிக்கலாம்.
Tags:    

Similar News