செய்திகள்
கோப்பு படம்

மதுரையில் மருத்துவ படிப்புக்கு இடம் வாங்கி தருவதாக ரூ. 22½ லட்சம் மோசடி

Published On 2020-02-11 11:07 GMT   |   Update On 2020-02-11 11:07 GMT
வெளிநாட்டு மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ. 22½ லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை:

மதுரை மாவட்டம், மேலூர் கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 53). இவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

எனது மகன் வெளிநாட்டில் மருத்துவம் படிப்பதற்காக காளவாசல் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் மையத்தை நாடினேன். அந்த மையத்தை சேர்ந்த பாரதிமோகன் என்பவர் உக்ரைனில் மருத்துவம் படிக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.

இதையடுத்து பாரதி மோகன், ராமநாதபுரம் திருலோகசுந்தர், உடுமலை ஹரிசுதன், திண்டுக்கல் ராகுல்நாத் ஆகிய 4 பேரிடம் ரூ. 22½ லட்சத்தை கொடுத்தேன்.

பணத்தை பெற்றுக் கொண்டபின் எனது மகன் உக்ரைனுக்கு சென்றார். அங்கு அரசு அங்கீகாரம் இல்லாத கல்லூரியில் எனது மகனை தனியார் மையம் சேர்த்துவிட்டது. ஆனால் அதில் உடன்பாடு இல்லாததால் எனது மகன் நாடுதிரும்பிவிட்டார். அதன் பிறகு அந்த தனியார் மையத்தினர் அங்கீகாரம் உள்ள கல்லூரியில் சேர்த்து விடுவதாக கூறினர்.

ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. பணத்தையும் திருப்பி தர மறுத்து வருகின்றனர். எனவே பணத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் பண மோசடி செய்த பாரதிமோகன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News