செய்திகள்
முதலமைச்சர் பழனிசாமி

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி

Published On 2020-02-09 08:08 GMT   |   Update On 2020-02-09 08:17 GMT
சேலத்தில் நடந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் என தெரிவித்தார்.
சேலம்:

சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன கால் நடை பூங்கா அமைக்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, தலைவாசலில் கால்நடை பூங்கா அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வுசெய்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்தது. சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் பூங்கா அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.

இந்நிலையில், கால்நடை ஆராய்ச்சி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அமைக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

தமிழகத்தில் மேலும் 3 கால்நடை தீவன தொழிற்சாலை அமைக்கப்படும். திருவண்ணாமலை,திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கால்நடை தீவன தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

கால்நடை வளர்ப்பு தொழில் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது. கால்நடை துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்கு கால்நடை வளர்ப்பு திட்டம் உதவுகிறது. அரசின் திட்டங்களால் கிராமப்புற பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது.

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அமைக்கப்படும். காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு அனுமதி தராது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News