செய்திகள்
பதவி இழந்த கிருஷ்ணமூர்த்தி

கரூர் சித்தலவாய் பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவி திடீர் பறிப்பு - மறுதேர்தல் நடத்த முடிவு

Published On 2020-02-08 15:43 GMT   |   Update On 2020-02-08 15:43 GMT
இடஒதுக்கீட்டுக்கு மாறாக நடைபெற்றதால் கரூர் சித்தலவாய் பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டு மறு தேர்தல் நடக்கவுள்ளது.
கரூர்:

தமிழகத்தில் கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. அதன் பிறகு ஜனவரி 11-ந் தேதி தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடந்தது.

தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கடந்த ஒரு மாதமாக மக்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சித்தலவாய் பஞ்சாயத்து துணைத்தலைவர் மற்றும் 6-வது வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என நேற்று அறிவித்து தேர்தல் அதிகாரி நோட்டீஸ் வெளியிட்டுள்ளார்.

இந்த பதவிகளுக்கு மறுதேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது மாநிலதேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு ஆணை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இது சித்தலவாய் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திடீர் பதவி ரத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் கூறப்படுகிறது. அதாவதுசித்தலவாய் பஞ்சாயத்து 6-வதுவார்டு உறுப்பினர் பதவி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இடஒதுக்கீட்டிற்கு மாறாக அங்கு ஆண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஜெயசீலன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய ஆண் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிட்டனர். இதில் அதிக வாக்குகள் பெற்ற கிருஷ்ண மூர்த்தி வெற்றி பெற்றார். அதன் பிறகு நடந்தமறைமுக தேர்தலில் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட வார்டில் ஆண்கள் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆவணங்களை தேர்தல் ஆணையம் சரிபார்த்தது. அப்போது இடஒதுக்கீட்டிற்கு மாறாக தேர்தல் நடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே 1995ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி விதி எண். 253 (111)யின் படி இடஒதுக்கீட்டிற்கு மாறாக நடத்தப்பட்டதால் சித்தலவாய் 6-வதுவார்டு தேர்தல் மற்றும் துணை தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணமூர்த்தி பதவி இழந்துள்ளார். முதல் முறையாக நடந்துள்ள இந்த நடவடிக்கை உள்ளாட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோன்று உள்ளாட்சி விதிகளை சரியாக கவனிக்காத சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்திய அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இது குறித்து பதவி இழந்த கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், அதிகாரிகள் அவசரமாக தேர்தல் நடத்தியதாக கூறுகிறார்கள். நான் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து தேர்தலில் வெற்றி பெற்றேன். கிராமசபை கூட்டம் உள்ளிட்ட எந்த பிரச்சினைகளையும் தீர்க்க கிராமத்திற்கு வராத அதிகாரிகள் இப்போது கடிதம் மட்டும் வழங்க என்னை தேடி வந்துள்ளனர். இது தொடர்பாக வக்கீல்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்றார்.
Tags:    

Similar News