செய்திகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு- மேலும் 2 பேர் கைது

Published On 2020-02-08 08:05 GMT   |   Update On 2020-02-08 08:05 GMT
இடைத்தரகர் ஜெயக்குமார் மற்றும் சித்தாண்டி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 2 பேர் இன்று கைதாகி உள்ளனர்.
சென்னை:

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, குரூப்-2ஏ ஆகிய தேர்வுகளில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 வழக்கு பதிவு செய்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி. ஜாபர்சேட் தலைமையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டதாக டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்கள் ஓம்காந்தன், மாணிக்கவேலு, போலீஸ்காரர்கள் முத்துக்குமார், பூபதி, சித்தாண்டி, புரோக்கர் ஜெயக்குமார் மற்றும் தேர்வு எழுதி வெற்றி பெற்றோர்கள் உள்பட 34 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதான ஒவ்வொருவரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்து வருகின்றனர். இந்த வாக்குமூலம் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.



இடைத்தரகர் ஜெயக்குமாரை தங்களது காவலில் எடுத்து போலீசார் வாக்குமூலம் வாங்கி வருகிறார்கள்.

இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை ஜெயக்குமார் கூறி வருகிறார். இவரது வாக்குமூலம் முக்கியம் என்பதால் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் அவரது அறை முன்பு காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் ஜெயக்குமார் மற்றும் சித்தாண்டி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குரூப்-2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 2 பேர் இன்று கைதாகி உள்ளனர்.

அதில் ஒருவர் மயிலாடுதுறையை சார்ந்தவர், இன்னொருவர் கரூரை சேர்ந்தவர் ஆவார்.

இந்த 2 பேரும் குரூப்-2ஏ தேர்வு எழுதி மோசடியில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார்கள். இதனால் கைது எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த மோசடியில் நிறையபேர் சம்பந்தப்பட்டுள்ளதால் சங்கிலி தொடர் போல் வழக்கு விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

எனவே குரூப்-2ஏ தேர்வு மோசடியில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் வரிசையாக பட்டியலிடப்பட்டு அதன் அடிப்படையில் அவர்கள் எந்தெந்த மாவட்டத்தில் உள்ளார்கள் என்று கண்டறியப்பட்டு வருகிறது.

அவர்கள் ஒவ்வொருவரையும் விசாரித்து கைது செய்து வருகிறோம். எனவே மேலும் பலர் இன்னும் கைதாவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News