செய்திகள்
டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி முறைகேடு- கிராம நிர்வாக அலுவலர்கள் மீதும் நடவடிக்கை பாய்கிறது: சிபிசிஐடி

Published On 2020-02-07 10:54 GMT   |   Update On 2020-02-07 10:54 GMT
டிஎன்பிஎஸ்சி முறைகேடு எதிரொலி காராணமாக கிராம நிர்வாக அலுவலர்கள் மீதும் சிபிசிஐடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

சென்னை:

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 ஏ. குரூப்-4 அரசு தேர்வில் முறைகேடு செய்து பணியில் சேர்ந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வரும் நிலையில் பலர் சிக்கி வருகிறார்கள். தோண்ட தோண்ட வரும் புதையல் போல முறைகேடு செய்து பணியில் சேர்ந்தவர்கள் பட்டியல் நீண்டு வருகிறது. இந்த முறைகேட்டில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இடைத் தரகர்களாக பலர் செயல்பட்டுள்ளனர்.

முக்கிய இடைத் தரகரான ஜெயக்குமார் நேற்று கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல உண்மைகள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலர் சக்தி நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில் 2016-ம் ஆண்டு குரூப்-4 கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. தான் ரூ.15 லட்சம் இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் கொடுத்து வேலையில் சேர்ந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பல லட்சம் பேர் எழுதிய கிராம நிர்வாக அலுவலர் தேர்விலும் முறைகேடு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. 2016-ம் ஆண்டு நடந்த தேர்வு பட்டியலில் முதல் 100 இடங்களை பிடித்தவர்கள் யார், யார்? அந்த பட்டியலை பெற்று விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. முடிவு செய்துள்ளது.

ரேங்க் பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்றவர்களின் குடும்ப பின்னணி, கல்வி தரம், போன்றவற்றை விசாரிக்க முடிவு செய்திருப்பதால் அந்த பட்டியலை டி.என்.பி.எஸ்.சி.யிடம் கேட்டுள்ளது.

தற்போது பணியில் உள்ள வி.ஏ.ஓ.-களில் தேர்வு முறைகேடு செய்து பணியில் சேர்ந்தது யார்? எத்தனை பேர் சேர்ந்துள்ளனர். என்ற விவரத்தை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் களம் இறங்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சக்தி இன்று நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்கள் தெரிய வரும் என்பதால் அவரை காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர்.

வி.ஏ.ஓ. தேர்விலும் பலர் சிக்க வாய்ப்பு இருப்பதால் இந்த வழக்கு மேலும் தீவிரமாகிறது.

Tags:    

Similar News