செய்திகள்
கோப்பு படம்

ரூ.60 லட்சம் கேட்டு அதிமுக பிரமுகருக்கு வெடிகுண்டு மிரட்டல் - ரவுடிகள் உள்பட 3 பேர் மீது வழக்கு

Published On 2020-02-06 09:27 GMT   |   Update On 2020-02-06 09:27 GMT
ரூ.60 லட்சம் தராவிட்டால் வெடிகுண்டு வீசி கொலை செய்து விடுவதாக அ.தி.மு.க. பிரமுகருக்கு மிரட்டல் விடுத்த ரவுடிகள் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சேதராப்பட்டு:

கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் அப்துல் அமீது (வயது 62). இவர் கோட்டக்குப்பம் பேரூராட்சி தலைவராக 2 முறை பதவி வகித்துள்ளார். தற்போது இவர் விழுப்புரம் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இதற்கிடையே அப்துல் அமீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோட்டக்குப்பத்தை சேர்ந்த சதக்கத்துல்லா என்பவருக்கு சொந்தமான இடத்தை வாங்கினார்.

ஆனால், அந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கியதாக கூறி சதக்கத்துல்லாவின் 5-வது மகளை திருமணம் செய்து தற்போது பிரான்சில் வசித்து வரும் புதுவை சுல்தான்பேட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தமிமூன் அன்சாரி என்பவர் அப்துல் அமீதுவிடம் கூடுதலாக ரூ.60 லட்சம் தரவேண்டும் என்று கேட்டு வந்தார்.

அவ்வப்போது அப்துல் அமீதுவிடம் போனில் பேசி பணத்தை கேட்டு வந்தார். ஆனால், அப்துல் அமீது பணத்தை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் சம்பவத்தன்று 2 பேர் செல்போனில் அப்துல் அமீதுவிடம் தமிமூன் அன்சாரிக்கு கொடுக்க வேண்டிய ரூ.60 லட்சத்தை கொடுக்காவிட்டால் வெடி குண்டு வீசி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

அதேபோல் கோட்டக் குப்பத்தில் கடை நடத்தி வரும் அப்துல் அமீதுவின் மகனையும் நேரில் சந்தித்து அவர்கள் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து அப்துல் அமீது கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்துல் அமீதுவிடம் செல்போனில் பேசிய உரையாடல் மற்றும் அப்துல் அமீதுவின் மகன் கடைக்கு சென்று அவரை மிரட்டிய போது கடையில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவின் பதிவை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிரான்சில் வசித்து வரும் தமிமூன் அன்சாரி சுல்தான்பேட்டையில் உள்ள தனது தம்பி மூலம் கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த 2 ரவுடிகளை ஏவி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

இதையடுத்து தமிமூன் அன்சாரி மற்றும் 2 ரவுடிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்த 2 ரவுடிகளை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Tags:    

Similar News