செய்திகள்
கோப்பு படம்

பால் பாக்கெட் எடுத்து செல்வது போல் நூதன முறையில் மணல் கடத்தல் - வாலிபர் கைது

Published On 2020-02-06 09:11 GMT   |   Update On 2020-02-06 09:11 GMT
பாகூரில் நூதன முறையில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.
பாகூர்:

புதுவையில் ஆறுகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதால் கட்டுமான பணிக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது மணல் விலை தங்கம் போன்று விலை உயர்ந்துள்ளது. இதனால் ஆறுகளில் திருட்டுத்தனமாக மணல் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகிறது.

மணல் திருட்டை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டாலும் அவர்களுக்கு டிமிக்கி காட்டிவிட்டு மணல் கொள்ளை சம்பவங்கள் தொடரதான் செய்கின்றன.

பாகூர், சோரியாங்குப்பம் தென் பெண்ணையாற்றில் மணல் கொள்ளையை தடுக்க பாகூர் போலீசார் பல்வேறு வழிகளில் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நடவடிக்கையால் மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் போன்றவற்றின் மூலம் மணல் கொள்ளை அடிப்பதை கைவிட்டு விட்டு தற்போது நூதன முறையில் மணல் கொள்ளை நடந்து வருகிறது.

ஆற்றிலிருந்து சாக்குப் பைகளில் மணலை நிரப்பி அதனை மோட்டார் சைக்கிள் மூலம் கொண்டு சென்று மறைவிடத்தில் குவித்து வைத்து பின்னர் போலீசார் கண்டுபிடிக்காத வகையில் மணலை கூண்டு வண்டிகள் மூலம் மற்றும் மினி லாரிகளில் கீழே மணல் பரப்பி விட்டு மேலே மற்ற பொருட்களை எடுத்துச் செல்வது போல் மணலை கடத்தி செல்கின்றனர். இதே போல் மணல் கடத்திச் சென்ற 10-க்கும் மேற்பட்ட கூண்டு வைத்த வாகனங்களை பாகூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதுபோல் சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து நூதன முறையில் மணல் கடத்தி செல்லப்படுவதாக பாகூர் போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாகூர் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அன்பழகன், வீரப்பன் ஆகியோர் நேற்றிரவு பாகூர் மாஞ்சோலை ரோட்டில் சாதாரண உடையில் நின்று கண்காணித்தனர். அப்போது அதிகாலை 3 மணி அளவில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த கூண்டு போட்ட வேனை தடுத்து நிறுத்தினர். வேனை ஓட்டி வந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது வேனில் பால் பாக்கெட் எடுத்துச் செல்வதாக கூறினார். ஆனாலும் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வேனை திறந்து பார்த்தனர். அப்போது வேனில் சுமார் 100-க்கும் மேற்பட்ட சாக்குப் பைகளில் மணல் நிரப்பப்பட்ட இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் கூண்டு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் டிரைவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் குருவிநத்தம் பாரதி நகரைச் சேர்ந்த ராஜேஷ் (வயது26) என்பது தெரிந்தது. இதை தொடர்ந்து ராஜேஷை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News