செய்திகள்
சென்னை ஐகோர்ட்

டிஎன்பிஎஸ்சி தேர்வு மோசடி- தலைமை செயலக பெண் ஊழியர் முன்ஜாமீன் மனு

Published On 2020-02-06 06:19 GMT   |   Update On 2020-02-06 06:19 GMT
டிஎன்பிஎஸ்சி தேர்வு மோசடியில் ஏற்கனவே கைதான 3 பேருடன் தேர்வு எழுதிய கவிதா என்பவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
சென்னை:

டி.என்.பி.எஸ்.சி. அரசு பணியாளர் தேர்வு குரூப்-2ஏ, குரூப்-4 ஆகியவற்றில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் முக்கிய தரகராக செயல்பட்ட ஜெயக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் பணம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களை குறிவைத்து போலீசார் கைது செய்து வருகிறார்கள்.



அதன்படி, விக்னேஷ், சுதா, சுதாதேவி ஆகியோர் பணம் கொடுத்து தேர்வு பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு பணம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்ற பலரும் தற்போது அரசு பணிகளில் இருந்து வருகிறார்கள்.

அவர்கள் ஒவ்வொருவரும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இவ்வாறு பணியில் சேர்ந்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஏற்கனவே கைதான 3 பேருடன் தேர்வு எழுதிய கவிதா என்பவர் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

கவிதா தற்போது தலைமை செயலகத்தில் நிதித்துறையில் அசிஸ்டண்ட் பணியில் இருந்து வருகிறார். 2017 ஆகஸ்டு மாதம் 6-ந்தேதி நடந்த குரூப்-2ஏ தேர்வை அவர் எழுதினார்.

ராமேசுவரம் வேற்கோடு ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் இந்த தேர்வு நடந்தது. அதில் கவிதா ஒட்டுமொத்த அளவில் 48-வது ரேங்கும், ஜாதி அடிப்படையில் 6-வது ரேங்கும் பெற்றிருந்தார். அதன்மூலம் அரசு பணிக்கு தேர்வானார்.

இவருடன் அதே பள்ளியில் தேர்வு எழுதிய விக்னேஷ் என்பவர் இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 46-வது ரேங்க் எடுத்திருந்தார். கவிதா தேர்வு பெற்றபோது அவருடன் தேர்வு எழுதிய சுதா, சுதாதேவி ஆகியோர் கைதாகி இருக்கிறார்கள்.

எனவே எந்த நேரத்திலும் தானும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் அவர் முன்ஜாமீன்மனு தாக்கல் செய்துள்ளார்.

ஏற்கனவே கவிதா பிரசவ விடுமுறையில் இருந்து வருகிறார். அவருக்கு ஜனவரி 23-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது.

கவிதா தன்னுடைய முன்ஜாமீன் மனுவில், என்னுடன் தேர்வு எழுதியவர்கள் கைதாகி இருந்த நிலையில் நானும் கைது செய்யப்படலாம் என்று அஞ்சுகிறேன். எனக்கு பிறந்த பச்சிளம் குழந்தையை கவனிக்க வேண்டியது இருப்பதால் எனக்கு முன்ஜாமீன் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அவருடைய முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வர இருக்கிறது. பிரசவமாகி கைக்குழந்தையுடன் இருக்கும் அவருக்கு முன்ஜாமீன் கிடைக்குமா? இல்லையா? என்பது விசாரணையின் போது தான் தெரியவரும்.

Tags:    

Similar News