செய்திகள்
தமிழக அரசு

சி.பா.ஆதித்தனார் விருது பெற விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு

Published On 2020-02-06 02:52 GMT   |   Update On 2020-02-06 02:52 GMT
சி.பா.ஆதித்தனார் நாளிதழ், வார இதழ், மாத இதழ் விருது உள்ளிட்ட 7 விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ் அறிஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தேவநேய பாவாணர் விருது, அருள்நிறை காரைக்கால் அம்மையார் விருது, வீரமாமுனிவர் விருது, சி.பா.ஆதித்தனார் நாளிதழ், வாரஇதழ், மாத இதழ் விருது என புதிய 7 விருதுகளை அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழ் அறிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சித்திரை தமிழ் புத்தாண்டை மீட்டெடுத்த ஜெயலலிதா, எண்ணற்ற விருதுகளும், பரிசு பாராட்டு சான்றுகளும், நலத்திட்டங்களும் வழங்கி சிறப்பித்துள்ளார். அந்த வகையில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ் அறிஞர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, தேவநேய பாவாணர் விருது, அருள்நிறை காரைக்கால் அம்மையார் விருது, வீரமாமுனிவர் விருது, சி.பா.ஆதித்தனார் நாளிதழ், வாரஇதழ், மாத இதழ் விருது என புதிய 7 விருதுகளை அறிவித்துள்ளார். அவ்விருதுகளுடன் சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகளின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளன.

அதன்படி விழாவும், விருதுகள் வழங்குதலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு (2020) சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப்படிவம், விண்ணப்பத்திற்கான வரையறைகள்      www.tamilvalarchithurai.com      என்ற தமிழ் வளர்ச்சித்துறையின் இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பவர்கள் தன் விவர குறிப்புகளுடன், 2 புகைப்படம், எழுதிய நூல்கள் விவரத்துடன் தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-600008 என்ற முகவரிக்கு வருகிற 29-ந் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பவேண்டும். மேலும் தகவல்களுக்கு 044-28190412, 28190413 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News