செய்திகள்
போலீசார் விசாரணை

துடியலூர் சிறுமி பலாத்காரம் செய்து கொலை- மேலும் 5 பேரிடம் போலீசார் விசாரணை

Published On 2020-02-05 05:07 GMT   |   Update On 2020-02-05 05:07 GMT
கோவை துடியலூரை சேர்ந்த சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை துடியலூரை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த மார்ச் 25-ந்தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து துடியலூர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொண்டாமுத்தூர் உலியம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ்குமார் (34) என்பவரை கைது செய்தனர்.

போக்சோ கோர்ட்டில் இந்த வழக்கு நடந்தது. டிசம்பர் 27-ந்தேதி நீதிபதி ராதிகா குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.

சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மேலும், ஒரு நபரின், டி.என்.ஏ., இருப்பது தெரிய வந்துள்ளது. அந்நபரையும் கைது செய்ய வேண்டும் என சிறுமியின் தாய் மனு அளித்துள்ளார். இது குறித்து பெண் போலீஸ் அதிகாரி விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அனந்தநாயகி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:-

சிறுமி பாலியல் வழக்கு தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 5 பேரிடம் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சந்தேக நபர்களின் பட்டியலில் உள்ள மேலும் சிலரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோர்ட்டு அனுமதி பெற்று சந்தேக நபர்களின் ரத்த மாதிரியை சேகரித்து டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது .

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மற்றொரு குற்றவாளியை போலீசார் விரைவில் பிடித்து கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளனர்.

இதனால் இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

Similar News