செய்திகள்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜை காட்சி

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா: யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

Published On 2020-02-05 01:05 GMT   |   Update On 2020-02-05 01:05 GMT
23 ஆண்டுகளுக்குப் பின் தஞ்சாவூர் பெரிய கோவிலில் குடமுழுக்கு விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர்:

உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள தஞ்சை பெரிய கோவில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர் கள், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1010-ம் ஆண்டு கட்டினார். இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது. கடைசியாக 1997-ம் ஆண்டு பெரியகோவில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெற்றது.

தஞ்சை பெரியகோவிலில் உள்ள பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன், கருவூரார், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் உள்ளன.



மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு விழா இன்று அதிகாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதையொட்டி கடந்த 2 ஆண்டுகளாக தொல்லியல் துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த கோவிலில் உள்ள தெய்வங்களின் சக்தியை வேதாகம முறைப்படி பெருவுடையார் சன்னதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். அதனை பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். திருப்பணிகள் முடிந்து கடந்த மாதம் 27-ந்தேதி பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. அன்று 39½ அடி உயரத்தில் செய்யப்பட்ட புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மேலும் பெரியகோவிலில் உள்ள 216 அடி விமான கோபுரம் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளின் கோபுர கலசங்களும் கழற்றப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டது. விமான கோபுர கலசம் கடந்த 30-ந்தேதி அதிகாரிகள் முன்னிலையில் பொருத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மற்ற சன்னதி கோபுர கலசங்களும் பொருத்தப்பட்டன.



பூர்வாங்க பூஜையை தொடர்ந்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கும்பலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கடந்த 1-ந்தேதி மாலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜை பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்க வளாகத்தில் தொடங்கியது. 2-வது நாள் 2, 3-ம் கால யாகசாலை பூஜையும், 3-வது நாள் 4, 5-ம் கால யாகசாலை பூஜையும், நேற்று 6, 7-ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.



தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு விழா இன்று அதிகாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஜபம், ஹோமம் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு பூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானம் நடைபெறுகிறது. 7.25 மணிக்கு யாகசாலை பூஜையில் இருந்து கலசங்கள் எழுந்தருளல் நடைபெறும்.

அதைத்தொடர்ந்து 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. 10 மணிக்கு பெரியநாயகி அம்மன், பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் குடமுழுக்கு நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகமும், 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சியும் நடைபெறுகிறது.

குடமுழுக்கை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் எந்தவித சிரமமும், கெடுபிடியும் இல்லாமல் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகளில் குடிநீர் வசதி, இளைப்பாற அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

குடமுழுக்கையொட்டி பக்தர்களின் வருகைக்காக சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளது. பெரிய கோவில் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் 192 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்காக ஒரு வழியும், முக்கிய பிரமுகர்கள் செல்வதற்காக ஒரு வழியும், மிகவும் முக்கிய பிரமுகர்கள் செல்வதற்காக தனி வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினரும் தயார் நிலையில் வாகனங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாநகரில் தற்காலிக பஸ் நிறுத்தம், வாகன நிறுத்தும் இடம் 21 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக பஸ் நிலையம் மற்றும் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களை அழைத்து செல்வதற்காக பள்ளி, கல்லூரியை சேர்ந்த 175 வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 5,500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

குடமுழுக்கையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் வரவேற்பு வளைவுகளும், தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தையொட்டி தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
Tags:    

Similar News