செய்திகள்
ஜல்லிக்கட்டு

திருப்பூர் அலகுமலை ஜல்லிக்கட்டில் 95 பேர் காயம்

Published On 2020-02-03 10:28 GMT   |   Update On 2020-02-03 10:28 GMT
திருப்பூர் அலகுமலை ஜல்லிக்கட்டில் 40 வீரர்களும், 37 காளை உரிமையாளர்களும், 18 பார்வையாளர்களும் என மொத்தம் 95 பேர் காயமடைந்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம் சார்பில் 3-ம் ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமை வகித்தார். பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் முன்னிலை வகித்தர். அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத் தலைவர் பழனிசாமி வரவேற்றார். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சார் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மொத்தம் 784 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். 7 மருத்துவக்குழு தயார் நிலையில் இருந்தனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வந்திருந்தனர். நிகழ்ச்சியை பார்க்க 10 இடங்களில் பெரிய திரை வைக்கப்பட்டிருந்தது

ஜல்லிக்கட்டு போட்டியில் முதலில் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதன்பின்னர் மற்ற காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. இதில், சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் மடக்கிப்பிடித்தனர். சில காளைகளை மாடிபிடி வீரர்களை மிரட்டி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.

இந்த ஜல்லிக்கட்டில் சிவகங்கையைச் சேர்ந்த தென்னவன், கோவையைச் சேர்ந்த வெங்கடேஷ், புதுக்கோட்டையைச் சேர்ந்த கனகராஜ், நாமக்கல்லைச் சேர்ந்த மணி, திருப்பூரைச் சேர்ந்த பாலசந்திரன் உள்ளிட்ட 40 வீரர்களும், 37 காளை உரிமையாளர்களும், 18 பார்வையாளர்களும் என மொத்தம் 95 பேர் காயமடைந்தனர்.

பலத்த காயம் அடைந்த 9 பேருக்கு முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

மதுரை மாவட்டம், வெளத்தூர் ஜெகதீஷ் 12 காளைகளை அடக்கி முதலிடத்தையும், மதுரை மாவட்டம், கருப்பாயூரணி கார்த்திக் 11 காளைகளை அடக்கி 2-ம் இடத்தையும், திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தைச் சேர்ந்த கார்த்திக் 9 காளைகளை அடக்கி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த கட்டப்பா என்ற காளை முதலிடத்தையும், திருச்சியைச் சேர்ந்த சாமிரவி என்ற காளை 2-ம் இடத்தையும், புதுக்கோட்டையைச் சேர்ந்த அனுராதா என்ற காளை 3-ம் இடத்தையும் பிடித்தன.

வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்களுக்கு தங்கக் காசு, பீரோ, நாற்காலி, பாத்திரம், மிக்சி, கிரைண்டர், சைக்கிள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ரூ.35 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.


Tags:    

Similar News