செய்திகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அரசு பணியில் சேர்ந்த 37 பேரை பிடிக்க தீவிர வேட்டை

Published On 2020-02-03 10:05 GMT   |   Update On 2020-02-03 10:05 GMT
குரூப்-2ஏ தேர்வு மோசடியில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதி உள்ள 37 பேரையும் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னை:

குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோசடி பற்றி பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் குரூப்-2ஏ மோசடி விவகாரமும் வெளிச்சத்துக்கு வந்தது.

குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வில் பல்வேறு முறைகேடு நடைபெற்றதற்கு சென்னை முகப்பேரை சேர்ந்த தரகர் ஜெயக்குமாரே மூளையாக செயல்பட்டு உள்ளார்.

அவருடன் சென்னையை சேர்ந்த போலீஸ்காரர் சித்தாண்டியும் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. இருவரும் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

குரூப்-2ஏ மோசடியில் கடந்த 2 நாட்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறுக்கு வழியில் லஞ்சம் கொடுத்து கூடுதல் மதிப்பெண்கள் பெற்று அரசு துறைகளில் பணியில் இருப்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த முறைகேட்டில் பெண்கள் பலரும் துணிச்சலுடன் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

குரூப்-2ஏ மோசடி தொடர்பாக நேற்று முன்தினம் காரைக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த சிவகங்கை மாவட்டம் அண்ணாமலை நகரை சேர்ந்த வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.

இவர் தலைமறைவாக உள்ள போலீஸ்காரர் சித்தாண்டியின் தம்பி ஆவார். முறைகேடான வழியில் பணம் கொடுத்து அதிக மதிப்பெண்கள் பெற்று 8-வது இடத்தில் இவர் தேர்வாகி இருந்தார்.

இவரைப்போல ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஜெயராணி என்பவரும் முறைகேடாக தேர்ச்சி பெற்றது தெரிய வந்தது. அவரும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் மேலும் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை பெரம்பூர் திரு.வி.க. நகரை சேர்ந்த விக்னேஷ், தூத்துக்குடியை சேர்ந்த சுதா, விழுப்புரம் வழுதரெட்டி கிராமத்தை சேர்ந்த சுதாதேவி ஆகியோர் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரித்த வலையில் சிக்கினர்.

இவர்கள் 3 பேரும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தேர்வாகி இருக்கிறார்கள்.

குரூப்-2ஏ தேர்வு மோசடியில் 42 பேர் முறைகேடான வழியில் பணியில் சேர்ந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தமிழகத்தில் நிதி துறை, சட்ட துறை, வருவாய் துறை, சிறை துறை, காவல் துறை, சுகாதார துறை, போக்குவரத்து துறை, பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில், வேலை செய்து வருகிறார்கள். இந்த அலுவலகங்களில் உதவியாளர்கள், பெர்சனல் கிளார்க், லோயர் பிரிவு கிளார்க் உள்ளிட்ட பதவிகளில் உள்ளனர்.

இவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதி உள்ள 37 பேரையும் கைது செய்ய அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை போலீசில் பிடிபட்டுள்ள 5 பேரில் 3 பேர் பெண்கள் ஆவர். இவர்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜெயராணி, தூத்துக்குடி சுதா ஆகியோர் பதிவாளர் அலுவலகத்திலும், விழுப்புரம் சுதாதேவி, திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பணி புரிந்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் டி.என்.பி.எஸ்.சி. சார்பில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் முழுமையாக பட்டியல் கொடுக்கப்பட்டு விட்டது. 2017-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2ஏ தேர்வில் மோசடியாக லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்ந்த 42 பேரும் யார்-யார்? என்பது பற்றிய தகவல்களை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் கொடுத்துள்ளதால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒவ்வொருவராக வேட்டையாடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மோசடியாக அரசு பணிகளில் சேர்ந்துள்ளவர்கள் எந்தெந்த அலுவலகங்களில் பணியில் உள்ளனர் என்பதை கண்டுபிடித்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் அணி அணியாக அனைவரையும் பிடித்து சிறையில் தள்ள முடிவு செய்துள்ளனர்.

முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களின் பட்டியலை போலீசார் மிகவும் ரகசியமாக வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இருப்பினும் லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி பணியில் சேர்ந்துள்ளவர்கள் எங்கே நாமும் மாட்டிக் கொள்வோமோ? என அஞ்சிக் கொண்டுள்ளனர். இவர்களில் பலர் தாங்கள் பணிபுரிந்து வந்த அலுவலகத்தில் விடுமுறை எடுத்ததுடன், தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளனர்.

இதுபோன்ற நபர்கள் யார்-யார்? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசு அலுவலகங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதன் மூலம் குரூப்-2ஏ முறைகேடு வழக்கில் தொடர்ச்சியாக கைது நடவடிக்கை இருக்கும் என்று சி.பி.சி.ஐ.டி. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதனால் கடந்த 2017-ம் ஆண்டு குரூப்-2ஏ தேர்வு எழுதிய அனைவரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News