செய்திகள்
சப்-இன்ஸ்பெக்டர் வில்சன்

சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்

Published On 2020-02-03 04:10 GMT   |   Update On 2020-02-03 04:10 GMT
குமரி மாவட்டம் களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தைரோட்டில் ஒரு சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் கடந்த மாதம் 8-ந் தேதி இரவு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக திருவிதாங்கோடு அடப்புவிளையை சேர்ந்த அப்துல் சமீம் (வயது 29) மற்றும் நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த தவுபிக் (27) ஆகிய 2 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் கோர்ட்டு உத்தரவுபடி 2 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அதாவது குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. முதலில் அப்துல் சமீம், தவுபிக் ஆகியோருக்கு பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் கைதான பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போலீசாரை அச்சுறுத்துவதற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை பயங்கரவாதிகள் கொன்றதும் தெரியவந்தது.

பின்னர் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். அதோடு கொலை செய்த போது பயங்கரவாதிகள் அணிந்திருந்த ஆடைகளும் சிக்கின. இதற்காக கேரளாவுக்கு 2 பயங்கரவாதிகளும் அழைத்து செல்லப்பட்டனர்.

இதை தொடர்ந்து 10 நாட்கள் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து 31-ந் தேதி 2 பேரையும் மீண்டும் நாகர்கோவில் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே கைதான பயங்கரவாதிகள் தொடர்பான வழக்குகளை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கும் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. கொலை குறித்து என்.ஐ.ஏ. சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விரைவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.



இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை தொடர்பாக என்.ஐ.ஏ. தரப்பில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனினும் கோர்ட்டு மற்றும் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்ட பிறகு நாங்கள் சேகரித்துள்ள விவரங்கள் அனைத்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்” என்றார்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் பயங்கரவாதிகள் 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க விரைவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் மனுதாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News