செய்திகள்
சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தார்

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தார்

Published On 2020-02-02 11:03 GMT   |   Update On 2020-02-02 11:26 GMT
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவால் முன்னர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. இன்று பாஜகவில் இணைந்தார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராகவும் அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளராக இருந்த சசிகலா புஷ்பாவை அக்கட்சியில் இருந்து மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நீக்கினார்.

ஜெயலலிதா என்னை அடித்தார் என்று முன்னர் ராஜ்யசபையில் பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக கடந்த 2016-ம் ஆண்டில் அறிவித்தார். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக பாராளுமன்றத்தில் பகிரங்கமாக பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட தனது எம்.பி. பதவியை கட்சித்தாவல் தடை சட்டத்தின் மூலம் சபாநாயகர் பறிக்க கூடாது எனவும் சுயேச்சை எம்.பி.யாக அறிவிக்க கோரியும் சசிகலா புஷ்பா 2017-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது நினைவிருக்கலாம்.

அவ்வகையில் ராஜ்யசபை எம்.பி.யாக பதவி வகித்துவரும் சசிகலா புஷ்பா, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

சசிகலா புஷ்பா இதற்கு முன்னர் 2011-2014 ஆண்டுகளுக்கு இடையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று, தூத்துக்குடி நகராட்சி மேயராகவும் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News