செய்திகள்
சென்னை ஐகோர்ட்

திருச்சியில் இன்று நடைபெறும் தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டிற்கு தடை இல்லை - ஐகோர்ட் உத்தரவு

Published On 2020-01-30 21:43 GMT   |   Update On 2020-01-30 21:43 GMT
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெறும் தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாட்டிற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவரும், பத்திரிகையாளருமான வாராகி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு திருச்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. திருச்சியில் உள்ள ‘கேர்’ என்ற தனியார் கல்லூரியில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேச உள்ளார்.

கல்வி நிலையங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக மின்சாரம் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. எனவே, கல்வி நிலையங்களில் கல்வி தொடர்பான நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டுமே தவிர, வணிக ரீதியாக அவற்றை பயன்படுத்தக்கூடாது. ஆனால், திருச்சியில் தனியார் கல்வி நிலையத்தில், தி.மு.க., சார்பில் அரசியல் மாநாடு நடத்தப்படுகிறது.

ஏற்கனவே, கல்வி நிலையங்களில் தனியார் நிகழ்ச்சி நடந்தது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி என்.கிருபாகரன் தலைமையிலான அமர்வு தாமாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தி.மு.க. சார்பில் தனியார் கல்லூரி வளாகத்தில் மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் இன்று (வெள்ளிக் கிழமை) நடைபெற உள்ள தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டிற்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.

மேலும், ‘இந்த வழக்கில் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, வரு மான வரித்துறையை எதிர்மனுதாரர்களாக தாமாக முன்வந்து சேர்ப்பதாகவும், இந்த துறைகள் இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுக்களை தாக்கல் செய்யவேண்டும்’ என்றும் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற பிப்ரவரி 26-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Tags:    

Similar News