செய்திகள்
கி வீரமணி பேசிய காட்சி.

பொருளாதார சரிவால் 3½ கோடி பேர் வேலை இழந்துள்ளனர்-கி.வீரமணி பேச்சு

Published On 2020-01-29 13:11 GMT   |   Update On 2020-01-29 13:11 GMT
செய்யாறில் நீட்தேர்வு எதிர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் பேசிய கி.வீரமணி, நாட்டின் பொருளாதாரம் ரொம்ப, ரொம்ப கீழே போய் உள்ளதால் 3½ கோடி பேர் வேலையை இழந்துள்ளனர் என்றார்.

செய்யாறு:

செய்யாறில் திராவிட கழகத்தின் சார்பில் நீட்தேர்வு எதிர்ப்பு கூட்டம் நடந்தது. இதில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது:-

நாட்டின் பொருளாதாரம், ரொம்ப, ரொம்ப கீழே போய் உள்ளது. 45 ஆண்டுகாலத்தில் மிகவும் கீழ் நிலைக்கு சென்று உள்ளது. மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டு 7 துறைகளில் 3½ கோடி பேர் வேலையை இழந்துள்ளனர். நாட்டில் தொழில்வளர்ச்சி இல்லை. தளர்ச்சி தான் உள்ளது.

இதனை மறைக்கவே பல பிரச்சினைகளை உருவாக்கி திசை திருப்புகின்றனர். இதற்காக மாய குதிரைகளை தட்டி வேறு ஏதேனும் சர்ச்சை உண்டாக்கி விடுகின்றனர். சினிமா குதிரை, மாய குதிரைகளை அனுப்புகின்றனர்.

சினிமா குதிரை, மாயகுதிரை எல்லாம் ரேசில் ஜெயிக்க முடியாது. மாயக்குதிரை சினிமா கிராபிக்சில் பறக்கிற மாதிரி இருக்கும். நடைமுறையில் பறக்க முடியாது.

நாட்டில் பிரச்சினைக்கு பஞ்சமில்லை. விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பல பிரச்சினைகள் இருந்தாலும் முற்போக்கு சிந்தனையாளர் ஒன்றாக சேர்ந்து நீட் தேர்வு, தேசிய கல்விக்கொள்கை குறித்து நாடு தழுவிய அளவில் பேசி வருகிறோம்.

கல்வி என்பது அனைவருக்கும் அடிப்படையானது. வருகிற தலைமுறையினரின் கல்விக்கு ஆபத்து ஏற்படும் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக தான் நாகர்கோவிலில் இருந்து சென்னை வரை பெரும் பயணத்தை மேற்கொண்டு வருகிறோம்.

நீட் தேர்வால் தமிழகத்தில் 9 பேர் இறந்துள்ளனர். மாநில கல்வியில் படித்து மத்திய பாடத்திட்டத்தில் நீட் தேர்வில் கேள்வி கேட்பதால் மருத்துவ படிப்புக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் ஒவ்வொரு மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி செயல்படுகிறது.

நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்கள் வாய்ப்பு மறுக்கப்பட்டு வடநாட்டு மாணவர்கள் படிக்கும் நிலையை உருவாக்குவதை அனுமதிக்க கூடாது டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் முறைகேடு நடந்தது போல நீட் தேர்விலும் முறைகேடில் ஈடுபட்டு தேர்ச்சி பெற்றிருக்கலாம். நீட் தேர்வு முறைகேட்டை கண்டுபிடிக்க தனியாக கமி‌ஷன் அமைத்தால் தெரியும்.

புதிய கல்விக் கொள்கையில் இடஒதுக்கீடு கிடையாது என்ற நிலையில் அனைவருக்குமான கல்வி மறுக்கப்படும். இது உங்களின் போராட்டம். நீட் தேர்வு மற்றும் மாநில அரசின் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை நீக்காவிட்டால் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி திருச்சி பொதுக்குழு கூட்டத்தில் போராட்டம் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News