செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் 1 லட்சம் முக கவசம் தயார்

Published On 2020-01-29 08:43 GMT   |   Update On 2020-01-29 08:43 GMT
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் 1 லட்சம் முக கவசங்கள் தயார் நிலையில் உள்ளது என்று தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா கூறியுள்ளார்.

சென்னை:

தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து இன்று ஆய்வு செய்தார். விமான நிலைய உயர் அதிகாரிகளுடன் பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனிங் மூலம் சீனாவில் இருந்து வரும் பயணிகள் பரிசோதனை செய்யப்படுகிறார்கள். இதுவரையில் 15 ஆயிரம் பயணிகளுக்கு இது போன்ற சோதனை நடத்தப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் இந்த சோதனையை மேற் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்துவரும் பயணிகளுக்கு 2 விதமான ஸ்கேனிங் செய்யப்படுகிறது. சுய சோதனை படிவம் கொடுக்கப்பட்டு காய்ச்சல், இருமல், மூச்சு திணறல், போன்ற பாதிப்பு இருந்தால் ‘டிக்‘ செய்து கொடுக்க வேண்டும். அதே போல தெர்மல் பரிசோதனை செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இருந்தால் உடல் வெப்ப நிலையை வைத்து கண்டுபிடித்து விடலாம். கொரோனா அறிகுறி இருக்குமானால் அவர்களுக்கு 9 விதமான உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. சூட், முககவசம், கையுறை உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் சேர்க்கப்படுவார்கள்.

இதுவரையில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. சீன நாட்டை சேர்ந்த 60 பேர் தமிழகத்தில் வந்து தங்கி இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். சீனாவில் உள்ள தமிழக மாணவர்கள் மற்றும் பணி செய்யக் கூடியவர்களுக்கு வேண்டிய உதவி செய்து தரப்படும்.

கொரோனா சிகிச்சை அளிக்கக் கூடிய டாக்டர்கள், நர்சுகளுக்கு பயிற்சியும், பாதுகாப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் பயன்படுத்தும் லிப்ட், நகரும் படிக்கட்டு உள்ளிட்ட அவர்கள் கடந்து செல்லும் பகுதியினை சுத்தமாக வைக்கவும் விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உஷார் நடவடிக்கைக்காக 1 லட்சம் முக கவசங்கள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் ஓட்டல், பார்க், தியேட்டர். மால்களுக்கு வெளியில் சென்றுவந்தால் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். அசைவ உணவுகளை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News