செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்த மார்க்சிஸ்ட் தலைவர்கள்

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கைவிட வேண்டும்- அமைச்சரை சந்தித்து மா.கம்யூ. தலைவர்கள் வலியுறுத்தல்

Published On 2020-01-29 08:32 GMT   |   Update On 2020-01-29 08:32 GMT
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் சென்னையில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை சந்தித்து, 5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை கைவிட வேண்டுமென வலியுறுத்தினர்.
சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் ஆர். பத்ரி ஆகியோர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர். அப்போது 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். 

இது தொடர்பாக அமைச்சரிடம் கடிதம் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

கல்வித்துறையில் இதர மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகம் முன்னணி மாநிலமாக உள்ளது. இந்நிலையில் இதற்கு முரணாக 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்வு முறை மாநிலத்தின் கல்வி நிலையை பின்னுக்கு தள்ளிவிடும் என்பதை தங்களது கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைமுறையில் இல்லை. இத்தேர்வு அறிவிப்பின் மூலமாக சின்னஞ்சிறு மாணவர்கள் மத்தியில் தேர்வு பயம் ஏற்படும் என்பதோடு, கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.

தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை 164 என்பது  இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் 2009-க்கு எதிரானதாக அமைந்துள்ளது என்பதையும், குழந்தைகளுக்கான கட்டாய கல்வியை மறுக்கும் ஒரு அம்சமாக அமைந்துள்ளது. அரசியல் சாசனத்தில் பிரிவு 21 A வழங்கியுள்ள உரிமைகளை உறுதிப்படுத்துவதிலிருந்தும் விலகி நிற்கிறது. மேலும் இந்த உத்தரவானது இயந்திரகதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளதேயன்றி நடைமுறைகளை கணக்கில் கொள்ளவில்லை. 

இந்த அரசாணையானது கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் எவ்வித தேர்வு முறைகளும் இருக்கக்கூடாது என்பதற்கு முற்றிலும் முரணாக உள்ளது. இந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு கல்வி உரிமை திருத்தச் சட்டம் 2009-இல் எந்தவொரு பொதுத் தேர்வினையும் வலியுறுத்தவில்லை.

பொதுத்தேர்வு இல்லாத நிலையிலேயே தொடக்கக்கல்வி நிலையில் இடைநிற்றல் ஏற்பட்டு மாணவர்களது கல்வி தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே 8 ஆம் வகுப்புவரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற நிலை கொண்டுவரப்பட்டது.

ஆனால், இன்று தமிழக அரசு 5 ஆம் வகுப்பிலேயே பொதுத்தேர்வைக் கொண்டுவருவது குழந்தைகளை குறிப்பாக, ஏழை, எளிய கிராமப்புறக் குழந்தைகளை கல்விக்கூடங்களிலிருந்து வெளியேற்றுவதற்கு உதவி செய்வதாக அமைந்து விடும். பொதுத்தேர்வு என்று வரும்பொழுது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டு படிப்பை பாதியில் விட்டு விட்டு மாணவச் செல்வங்கள் குழந்தை தொழிலாளர்களாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் மாறும் நிலை உருவாகும். இது மிகப்பெரும் சமூக அநீதியை உருவாக்கிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின் புத்தகச்சுமையைக் குறைப்பதற்காகவும், பாடச்சுமையைக் குறைப்பதற்காகவும் முப்பருவ முறையைக் கொண்டுவந்தது. 5 புத்தகங்கள் 2 புத்தகங்களாக குறைக்கப்பட்டது. இதனால் ஆண்டு முழுவதும் படிக்க வேண்டிய பாடங்களை மூன்று பருவங்களாய்ப் பிரித்துப் படிக்கும் நிலை தற்போது நடைமுறையில் உள்ளது. ஒரு பருவத்தில் படித்த பாடங்கள் அந்தப் பருவத்தேர்வோடு முடிந்துவிடும். அடுத்த பருவத்திற்கு வேறு புத்தகங்கள் வந்துவிடும். ஆனால், தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள பொதுத்தேர்வில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கு மூன்று பருவங்களிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படும் என்று அறிவித்துள்ளது உச்ச கட்ட குழப்பத்தையும் தேவையற்ற முரண்பாட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழகத்தில் உள்ள நீண்ட கல்வி மரபிற்கு முரணாக,  5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முறையை அமலாக்கி, மாணவர்களையும்,  பெற்றோர்களையும் அச்சத்திற்குள்ளாக்கும் நடைமுறையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இப்பொதுத்தேர்வு முறை மாணவர்களின் இடைநிற்றலுக்கும், படிப்பை துறப்பதற்கும் காரணமாகி விடக்கூடாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News