செய்திகள்
பஞ்சாயத்து தலைவர்

சொந்த செலவில் வாக்குறுதியை நிறைவேற்றிய பஞ்சாயத்து தலைவர் - பாராட்டிய பொதுமக்கள்

Published On 2020-01-29 07:52 GMT   |   Update On 2020-01-29 07:52 GMT
கும்மிடிப்பூண்டி அருகெ நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் தனது வாக்குறுதியை சொந்த செலவில் நிறைவேற்றியதற்கு ஊர் பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி அருகே உள்ளது தண்டலச்சேரி ஊராட்சி. இப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் 5 கி.மீட்டர் தூரம் உள்ள கவரப்பேட்டை அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்கள் தினமும் அரசு பஸ்சில் செல்வது வழக்கம்.

சரியான நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் மாணவ-மாணவிகள் சரியான நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தலின் போது தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 33 வயதான பட்டதாரி இளைஞன் ஆனந்தராஜ் என்பவர் தேர்தல் வாக்குறுதியாக பள்ளி மாணவ-மாணவிகளின் போக்குவரத்து பிரச்சினையை தீர்ப்பதாக உறுதியளித்து இருந்தார்.

இந்த தேர்தலில் ஆனந்தராஜ் வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவர் ஆனார்.

தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிப்படி ஆனந்தராஜ் தற்போது மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல வசதியாக 2 வேன்களை ஏற்பாடு செய்து உள்ளார்.

இதில் டிரைவர், கண்டக்டர் நியமிக்கப்பட்டு பாதுகாப்பாக அப்பகுதி மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதற்கு மாணவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

பஞ்சாயத்து தலைவர் ஆனந்தராஜின் இந்த ஏற்பாட்டை அப்பகுதி மக்கள் பாராட்டி உள்ளனர்.

இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, “எங்கள் கிராமத்தில் சரியாக பஸ்கள் நின்று செல்வதில்லை. சரியான நேரத்துக்கு பஸ்களும் வராததால் பள்ளிக்கு தாமதமாக சென்று பாதிக்கப்பட்டோம்.இதனால் தினமும் ரூ.20 வரை கட்டணம் கொடுத்து வேனில் செல்லும் நிலை ஏற்பட்டது.



பஸ்சில் செல்லும் போது கூட்ட நெரிசலில் சிக்கினோம். மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி ஆபத்தான பயணம் செய்தனர்.

இப்போது பஞ்சாயத்து தலைவரின் ஏற்பாட்டில் பாதுகாப்பாகவும், உரிய நேரத்திலும் பள்ளிக்கு செல்கிறோம். அவருக்கு பாராட்டுக்கள்” என்றனர்.

தண்டலச்சேரி ஊராட்சி தலைவர் ஆனந்தராஜ் கூறியதாவது:-

தண்டலச்சேரி கிராமத்தில் 8-ம் வகுப்பு வரை மட்டுமே மாணவ, மாணவிகள் பயில அரசு பள்ளி உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சுமார் 100 பேர் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு அருகே 6 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதிலும் இதனில் குறிப்பாக 60 பேர் மாணவிகள் ஆவார்கள்.

தினமும் சரியான நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை என்பது ஒரு புறம் இருக்கும் நிலையில் கூட்ட நெரிசலில் எங்கள் கிராம பகுதியைச்சேர்ந்த மாணவிகள் சிக்கி தவிப்பது வேதனைக்குரியது. இந்த பிரச்சினை தேர்தலுக்கு முன்பு இருந்தே ஒரு சாதாரண மனிதாக எனது மனதை காயப்படுத்தியது. பள்ளி மாணவர்கள் பயணம் செய்திட போதிய அரசு பஸ்களை இயக்க வலியுறுத்தினாலும், காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்ட நெரிச்சல் என்பது பெண் குழந்தைகளுக்கு மனதளவில் ஒரு சவாலான வி‌ஷயம் ஆகும்.

எனவே தேர்தலில் போது பள்ளி மாணவர்கள் தினமும் அரசு பள்ளிக்கு செல்ல இலவச வேன் ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்து இருந்தேன். அதனை இப்போது எனது சொந்த செலவில் நிறைவேற்றி உள்ளேன்.

மாணவர்கள் பெரும்பாலும் அரசு பஸ்களில் பயணம் செய்திடும் நிலையில் தற்போது குறிப்பாக மாணவிகள் கவரைப்பேட்டையில் உள்ள அரசு பள்ளிக்கு தண்டலச்சேரி கிராமத்தில் இருந்து சென்று வர எனது சொந்த செலவில் வேன் வாங்கி விட்டு உள்ளேன். அந்த வேன் காலை 2 முறையும், மாலை 2 முறையும் சுமார் 60 மாணவிகளை பள்ளிக்கு அழைத்துச்சென்று வருகிறது. வேன் டிரைவருக்கு மாத சம்பளமாக ரூ.12 ஆயிரத்தை எனது சொந்த செலவில் தர திட்டமிட்டு உள்ளேன்.

கிராமத்தை பொறுத்தவரை பெண் பிள்ளைகள் மன உளைச்சலின்றி நல்ல கல்வி கற்க வழி வகை செய்தால் சமுதாயம் முன்னேறும் என்பது உண்மை என்கிற போதிலும் எங்கள் கிராமம் அந்த வி‌ஷயத்தில் முதலில் முன்னேறும் என்ற பெருமை ஒன்று மட்டும் எனக்கு போதும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News