செய்திகள்
கோப்பு படம்.

சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு- பிப்.1-ந்தேதி தீர்ப்பு

Published On 2020-01-28 11:30 GMT   |   Update On 2020-01-28 12:04 GMT
சென்னை அயனாவரத்தில் 12 வயது சிறுமி பல நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பிப்ரவரி 1ந்தேதி மகளிர் நீதின்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
சென்னை:

சென்னை அயனாவரத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயதான சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்தார். காது கேட்கும் திறன் குறைபாடு உள்ள அந்த மாணவி, தினந்தோறும் பஸ்சில் ஏறி பள்ளிக்கு சென்று வருவார். அந்த மாடியில் உள்ள தனது வீட்டுக்கும், பள்ளிக்கும் செல்லும்போது குடியிருப்பில் உள்ள லிப்டை பயன்படுத்துவார். ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்களோடு அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அனைவரிடமும் வெகுளித்தனமாக அந்த சிறுமி பேசுவாராம்.

இதை பயன்படுத்தி ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்கள் 4 பேர் முதலில் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ‘விஷயத்தை வெளியில் சொன்னால் உன்னை தீர்த்துக்கட்டிவிடுவோம்’, என்று கத்தியை காட்டி மிரட்டியதால் அந்த சிறுமியும் விஷயத்தை வெளியே சொல்ல பயந்து அமைதியாக இருந்து விட்டதாக கூறப்படுகிறது.

முதலில் 4 காம கொடூரன்களின் இச்சைக்கு பலியான அந்த சிறுமி, அடுத்தடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் காவல் பணிக்கு வரும் காவலாளிகள், பிளம்பர்கள் என அங்கு வேலை பார்க்கும் நபர்களின் பிடியிலும் சிக்கியுள்ளார். சுமார் 7 மாத காலமாக இந்த கொடுமை நீடித்துள்ளது.

லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள், பிளம்பர்கள் என மொத்தம் 24 பேரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களில் 17 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில்  குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசு தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டன. இரு தரப்பிலும் 43 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு 120 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2018 ஜூலையில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். போக்சோ சட்டத்தின்கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

பின்னர் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், 2019 ஜனவரி 11-இல் நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. 

அதன்பின்னர் சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில், இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது. பின்னர் போக்சோ நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள், சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் பிப்ரவரி 1-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில் ஒருவர் இறந்து விட்டதால் 16 பேர் மீதான குற்றச்சாட்டில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 
Tags:    

Similar News