செய்திகள்
எடப்பாடி பழனிசாமி - ஓ பன்னீர்செல்வம்

அண்ணா நினைவுநாள்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். மலர் அஞ்சலி

Published On 2020-01-28 09:57 GMT   |   Update On 2020-01-28 09:57 GMT
பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளான வருகிற 3-ந்தேதி அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.
சென்னை:

அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு நாளான வருகிற 3-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி அளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில், கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

இதில் மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல். ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப்பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு மற்றும் கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், வருகிற 3-ந்தேதி அன்று ஆங்காங்கே பேரறிஞர் அண்ணா சிலைக்கு அல்லது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News