செய்திகள்
நகைக்கடையில் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த முகமூடி கொள்ளையன் உருவம்.

நகைக்கடை உரிமையாளர் வீடு-கடையில் 255 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2020-01-28 08:36 GMT   |   Update On 2020-01-28 10:29 GMT
நகைக்கடை உரிமையாளர் வீடு மற்றும் கடையில் 255 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழித்துறை:

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த விரி கோடைச் சேர்ந்தவர் பொன் விஜய்.

மார்த்தாண்டம் புதிய பஸ் நிலையம் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது வீடு விரிகோடு பகுதியில் உள்ளது. இங்கு அவர் மனைவி, பிள்ளை மற்றும் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

நேற்று இரவு பொன் விஜய் நகைக்கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு வீடு திரும்பினார். நகைக் கடையின் சாவியை வீட்டின் பூஜை அறையில் உள்ள பீரோவில் வைத்து விட்டு தூங்கச் சென்றுவிட்டார்.

இன்று காலையில் எழுந்த பொன்விஜய் பூஜை அறைக்கு சென்ற போது அதன் கதவு திறந்து இருந்தது. அவர் உள்ளேச் சென்று பார்த்தார். அப்போது பூஜை அறையில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தது.

அவர் பீரோவை பார்த்த போது அதில் வைத்திருந்த 55 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அந்த பீரோவில் வைத்திருந்த நகைக் கடையின் சாவியும் மாயமாகி இருந்தது.

பதறிப்போன பொன் விஜய் மார்த்தாண்டத்தில் உள்ள நகைக்கடைக்கு விரைந்துச் சென்றார். நகைக் கடையின் ‌ஷட்டர் திறந்து கிடந்தது. கடையின் பூட்டுகள் சிறிது தூரத்தில் வீசப்பட்டு கிடந்தது.

கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது அங்கும் கொள்ளையன் கைவரிசை காட்டி இருந்தது தெரியவந்தது. நகைக் கடையில் இருந்து 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. நகைக்கடையின் ஷோகேஸ்களில் இருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

மார்த்தாண்டம் போலீசார், நகைக்கடை உரிமையாளர் பொன் விஜயின் வீட்டுக்குச் சென்று கொள்ளை நடந்த பூஜை அறையை பார்த்து விசாரணை நடத்தினார்கள்.

அதன்பிறகு கொள்ளை நடந்த நகைக்கடைக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த நகைக் கடையில் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தது.

அந்த கேமிராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்த்தனர். அந்த கேமிரா காட்சிகளில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. முகமூடி அணிந்த நிலையில் நகைக் கடையில் கொள்ளையன் அந்த கடையில் கைவரிசை காட்டி உள்ளான்.

அந்த கொள்ளையன் எந்தவித பதட்டமும் இல்லாமல் கடையில் உள்ள அனைத்து நகைகளையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பி உள்ளதும் கேமிரா காட்சிகள் மூலம் தெரியவந்தது.

இந்த கொள்ளையில் ஈடுபட்டவன் நகைக்கடையின் சாவியை, நகைக்கடை உரிமையாளர் பொன்விஜயின் வீடு புகுந்து திருடிச் சென்று உள்ளான். இதனால் அந்த கொள்ளையன் நகைக் கடை உரிமையாளருக்கு நன்கு பழக்க மானவனாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

கொள்ளையனை கைது செய்ய போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News